(Reading time: 4 - 8 minutes)

கருத்துக் கதைகள் – 29. மற்றொரு வழி - ஜான்சி

Doors

ந்த நகரத்தில் மிகவும் சிறப்புப் பெற்ற பள்ளியில் புதிதாக ஒரு பிரின்ஸிபல் பொறுப்பேற்றுக் கொண்டார்.அந்தப் பள்ளி மிகவும் தொன்மையான கட்டிடத்தில் நடைப் பெற்று வந்தது.அந்தக் கட்டிடத்தின் பழமையான மிகப் பிரமாண்டமான தூண்களும், மிக உயரமும், அகலமான கதவும், அதன் நுண்ணிய அலங்காரங்களும் மிகவும் பிரசித்திப் பெற்றவை

புதிய பிரின்ஸிபலுக்கு விழா நடத்த பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றுக் கூடினர். அந்த தருணத்தில் அவர் அனைவரிடமும் தாம் தமது மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப் போவதாகவும் அதில் வெற்றிப் பெறுபவர்களுக்கு மிகவும் சிறந்த பரிசொன்று அளிக்கவிருப்பதாகவும் அறிவித்தார்.

அனைத்து மாணவர்களும் ஆர்வத்தோடு போட்டியில் கலந்துக் கொள்ளக் காத்திருந்தனர்.போட்டியின் நாளும் வந்தது,அனைவரும் விளையாட்டுத் திடலில் திரண்டு நின்றனர்.அப்போது பிரின்ஸிபல் போட்டியின் விபரத்தை அறிவித்தார்.

"மாணவர்களே, தினம் தோறும் நீங்கள் அனைவரும் வகுப்பிற்கு வந்தவுடனேயே நமது பள்ளியின் கதவுகள் பூட்டப் பட்டுவிடும் என்பது நீங்கள் அறிந்ததே. இன்றைய போட்டி என்னவென்றால், யார் ஒருவர் தன்னுடைய பலத்தால் அந்த கதவைத் திறக்கிறாரோ அவரே வெற்றியாளர். போட்டியின் நேரம் இப்போதே ஆரம்பமாகிறது"

என்றுச் சொல்லி தம் இருக்கையில் அமர்ந்தார்.

போட்டி அறிவிக்கப் பட்ட பின்னர் மாணவர்களுக்கிடையே மிகுந்த சலசலப்பு எழுந்தது.

"இவ்வளவு பெரிய கதவு திறக்க நம்மால முடியாதப்பா? நாமென்ன சூப்பர் மேனா? "என அங்கலாய்ப்புகளும், கேலி கிண்டல்களும் நடந்தனவே அன்றி யாரும் போட்டியில் கலந்துக் கொள்ள முன் வரவில்லை.அந்நேரம் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் அக்கதவை நோக்கிச் சென்றான்.அனைவருடைய கிண்டலும் கேலியும் இப்போது அவனை நோக்கித் திரும்பியது.

அவன் அந்த கதவின் அருகில் போய் நின்று தன் மொத்தப் பலத்தையும் கூட்டி கை வைத்து தள்ளினான். என்ன ஆச்சரியம்(!) கதவு சற்றே திறந்தது.

"அட இது என்ன அதிசயம்" வியந்துப் பார்த்தனர் மற்றவர்கள். அவர்கள் கிண்டலும் கேலியும் இப்போது வியப்பாக மாறி விட்டது.

பிரின்ஸிபல் அந்த மாணவனை மேடைக்கு அழைத்தார். 

அனைவருடைய கரகோஷத்தோடு அவன் மேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். பரிசை வழங்கிய பிரின்ஸிபல் அதன் பின்னர் உரையாற்றினார்.

"மாணவர்களே நீங்கள் எல்லோரும் இவ்வளவு சிறிய மாணவனால் எவ்வாறு அந்த கதவை திறக்க முடிந்தது என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். முதலில் நான் அதற்கான பதிலை சொல்லி விடுகின்றேன்.அந்தக் கதவு எளிதாக திறக்க முடிந்ததன் காரணம் என்னவென்றால் அது தாளிடப் படாமல்தான் இருந்தது."

இதைக் குறிப்பிட்டவுடன் அனைவரும் ஒருவரை மற்றவர் பார்த்துக் கொண்டனர்.

உரைத் தொடர்ந்தது...

"பிரின்ஸிபல் இப்படி பொய் சொல்லலாமா என நீங்கள் யோசிப்பது புரிகிறது மாணாக்கர்களே, நான் கதவுகள் பூட்டப் பட்டிருக்கின்றன என்றுக் கூறியதற்கு ஒரு காரணம் இருக்கிறது.நான் அப்படி கூறியிரா விட்டால் நீங்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கேற்று இருந்திருப்பீர்கள்.ஆனால் நான் அவ்வாறு சொன்னதால் முயன்றுப் பார்க்காமலேயே இது செய்து முடிக்க இயலாத ஒன்று என்று முடிவு கட்டி விட்டீர்கள். 

ஆமோதித்த வண்ணம் மாணவர்கள் நின்றனர்.

இன்று நடைப் பெற்ற இந்தப் போட்டி உடல் வலுவைக் குறித்தது அல்ல. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம் என்ற நடை முறைக் குறித்தது.இந்த சின்னஞ்சிறு மாணவன் உங்களைப் போல இது செய்ய முடியாத காரியம் என்று  எண்ணாமல் அந்தக் கதவைத் திறந்துப் பார்க்க முயற்சி செய்தான். நீங்கள் எல்லோரும் இந்தச் சின்னப் பையனால என்னச் செய்ய முடியும் என்று அவனைக் கேலி கிண்டல் செய்ததை பொருட்படுத்தாமல், பின் வாங்காமல் தன்னுடைய எண்ணத்தில் நிலைத்து நின்றான் அதனாலேயே வென்றான்.

இதுப் போலவே திறக்க முடியாத கதவுகள் எனச் சொல்லப் படும் மிகப் பல விஷயங்கள் அதாவது மேற்படிப்பு, உயர்ந்த லட்சியங்கள்,சிறந்த பதவிகள், மேன்மையான வாழ்வு நிலை போன்றவை உங்கள் வாழ்க்கையில் எதிர் வரலாம். இதெல்லாம் நிகழாது நடக்காது என முன்னதாகவே முடிவுக் கட்டி விடாமல், ஒரு முறை முயன்றுப் பாருங்கள். முயன்று வெற்றிப் பெற்றால் மிகப் பெரிய மகிழ்ச்சி, ஆனால் தோல்வி அடந்தாலும் அதில் இழப்பதற்கு ஒன்றுமில்லையே, முயன்றுப் பார்த்ததன் மன நிறைவாவது மிஞ்சும்.

இதை மனதில் கொண்டு வளரவேண்டும் பிள்ளைகளே.....

என்று உரையாற்றி அமர்ந்தார். 

அனைத்து மாணாக்கரும் அன்று நல்லதொரு வாழ்க்கைப் பாடம் கற்றவர்களாக தமது வகுப்பிற்கு திரும்பினார்கள்.

 

கதை சொல்லும் கருத்து:

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

 

Story # 28 - Vetri

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.