(Reading time: 6 - 12 minutes)

பயணங்கள் முடிவதில்லை - 03 - அட்லாஸ்ட்!!!! - பிந்து வினோத்

Abudhabi airport

நியூயார்க் டூ அபுதாபி & அபுதாபி டூ சென்னை

திமூன்று மணி நேர சோதனைக்கு பிறகு, விட்டால் போதும் என்ற மனநிலையில் நான் இருக்க, எங்கள் விமானம் தரை இறங்கும் நேரம் வந்து சேர்ந்தது!

அங்கே தான் அடுத்த சோதனை தொடங்கியது.

விமானம் தரை இறங்கும் நேரத்தில் காது அடைப்பது போல இருக்கும்... சிலருக்கு வலிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். அதை ‘டாக்கில்’ செய்ய சிலர் காதில் பஞ்சு பயன்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு உறிஞ்சி குடிப்பது போல (sip) ஏதாவது குடிக்க தர சொல்வார்கள் இல்லை என்றால் லாலி-பாப் கொடுக்க சொல்வார்கள்!

லேன்ட் ஆக போகும் அறிவிப்பு கேட்ட உடனேயே கையில் வைத்திருந்த லாலி-பாப்பை எடுத்து என் பாப்பாவிடம் கொடுக்க, ஹுஹும் அதெல்லாம் அவங்களுக்கு பிடிக்கவில்லை!

என்னிடமே கொடுத்து விட்டு மெல்ல சிணுங்க ஆரம்பித்தாள்.

இந்த சிணுங்கல் வந்தால் என்ன ஆகும் என்று எனக்கு தெரியும் என்பதால் என் மடியிலே அவளை உட்கார வைத்து செல்லம் கொஞ்சி அவளை அமைதி ஆக்கினேன்.

அவள் அமைதி ஆனாளோ இல்லையோ, ஒரு விமானப் பணிப்பெண் வந்து, லேண்டிங் நேரத்தில் குழந்தையை அப்படி மடியில் வைத்துக் கொள்ள கூடாது என்றார்கள்.

என் குழந்தைக்கு இரண்டு வயது தான் ஆகிறது, அவள் அழுவாள் என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. கட்டாயப் படுத்தி அவளை தனி சீட்டில் உட்கார வைக்க சொன்னார்கள்.

பொதுவாக இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி சீட் வாங்க வேண்டுமென்று இல்லை. நம் மடியிலேயே வைத்து விமானத்தில் பயணம் செய்யலாம்.

ஒன்று, ஒன்றரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு நமக்கு வசதி என்றால் மட்டும் தனி சீட் புக் செய்துக் கொள்ளலாம்.

தனியே அவளை உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டேனோ இல்லையோ, விமானமே அதிரும் வண்ணம் அழ தொடங்கி விட்டாள்!

சாக்லேட், விடியோ, ஜூஸ், பிஸ்கட், பொம்மை ஹுஹும் எதுவுமே வேலை செய்யவில்லை...

நானும் என் மூத்த மகளும் முயற்சி செய்தது போதாதென்று மற்ற விமான பணிப்பெண்களும் ஏதேதோ செய்து பார்த்தார்கள், ஹுஹும் ஒரு பயனும் இல்லை...

நிமிடங்கள் செல்ல, முன்பு தனி சீட்டில் உட்கார வையுங்கள் என்ற விமான பணிப்பெண்னே வந்து அவளை மடியிலேயே உட்கார வைத்துக் கொள்ளுங்கள் ‘சாரி’ என்றார்.

‘நான் அப்போதே சொன்னேனா’ லுக் விட்டு விட்டு, பாப்பாவை மடியில் உட்கார வைத்தால்---- பூ!!!!

குட்டி மேடமின் அழுகை குறையவே இல்லை... மாறாக அது அலறலாக மாறி இருந்தது!!!!

அவர்களின் சமாதான உடன்படிக்கை எக்ஸ்பைர் ஆகி விட்டது போலும்!

அதற்கு மேலே முயற்சி செய்ய எனக்கு எனர்ஜியும் இல்லை...

விமானத்தில் இருந்தவர்களின் பாவம் என்ற பார்வையை தாங்கிக் கொண்டு, அழுகையையும் கேட்டுக் கொண்டு ஒரு வழியாக தரை இறங்கினோம்!

விமானம் தரை இறங்கியதோ இல்லையோ, மெல்ல மெல்ல அவளின் அழுகையும் நின்று போனது!

ஸோ, நீங்கள் சின்ன குழந்தையுடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்த லேண்டிங் நேரத்திற்கு என்ன செய்வது என்று யோசித்து தயாராக செல்லுங்கள். பெரியவர்கள் என்றால் வை திறந்து சொல்ல முடியும், குழந்தைகளுக்கு அழுவது ஒன்று தானே தெரியும்!

நின்று நிதானமாக அழுகையை பற்றி என்ன ஏதென்று யோசிக்க நேரமில்லாமல், கேரி-ஆன் பெட்டி & பைகளை எடுத்துக் கொண்டு, எங்களின் கனக்டிங் விமானதிற்க்கான கேட் நம்பரை பார்த்துக் கொண்டு நடந்தோம்... நடந்தோம்... நடந்துக் கொண்டே இருந்தோம்!!!!!

அபுதாபியிலும் இருந்த செக்யூரிட்டி செக்கை எந்த வித அட்வென்ச்சரும் இல்லாமல் முடித்துக் கொண்டு நீண்ட நடைப் பயணத்திற்கு பின் ஒருவழியாக கேட்டை அடைந்தோம்!

ஹுப்!!!

அபுதாபி ஏர்போர்ட் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றவில்லை! இனிமேல் தனியாக பயணத்திற்கு நோ – நோ என்று மட்டுமே நினைத்துக் கொண்டேன்.

கேட்டில் இருக்கும் விமான பணியாளரிடம், போர்டிங் பாஸ் பற்றி விசாரிக்கலாம் என்றால் அங்கே ஒருவருமே இல்லை!!!!

எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்!!!!

மனதை திட படுத்திக் கொண்டு கேட் நோக்கி வரும் வழியில் தெரிந்த விமான ‘லோகோ’வின் நினைவில், அங்கே சென்று கேட்கலாம் என்று என் மகள்கள் படையுடன் நான் திரும்பி நடக்க, வழியில் ஒரு விமான பணியாளர் வந்தார்!

இவர் தான் அவரோ! என்ற கேள்வியுடனே அவரிடம் சென்று அந்த கேட்டிற்கு தான் செல்கிறாரா என்றுக் கேட்டேன்.

என் அதிர்ஷ்டம், இவர் அவரே தான் tongue-out

வரிடம் என் கதையை சொல்லி போர்டிங் பாஸ் கேட்க, அவர் எங்கே இருந்து வருகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டார்!

அந்த கேள்விக்கு பின் இருக்கும் காரணம் பற்றி யோசிக்காமல் நியூயார்க் என்றேன்.

செக்-இன் செய்து பிரின்ட் அவுட் எடுத்தீர்களா என்றார்.

ஆம் என்றேன்.

அது தான் உங்கள் போர்டிங் பாஸ் என்று முகத்தில் தோன்றி இருந்த ‘அட லூசே’ ஸ்மைலை மறைக்க முயன்ற படி சொன்னார்!

கைப்பையில் இருந்த அந்த பிரின்ட் அவுட்டை எடுத்து பார்த்தால் அதில் கொட்டை எழுத்தில் போர்டிங் பாஸ் என்று எழுதி இருந்தது!

ஹி ஹி ஹி ஹி ஹி !!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.