(Reading time: 14 - 27 minutes)

அகல்யாவோ தன் மகனிடம் “நந்து நீ போய் குளிச்சுட்டு வா… நான் பேசுறேன்” என்று ஆதரவு கரம் நீட்டினார். “தேங்க்ஸ் மா” என்றவன் இரண்டு இரண்டு படிகளாய் தாவி தன் அறைக்கு சென்றான். “ப்ரியா” என்ற அகல்யாவின் அழைப்பில் திரும்பி அவரை பார்த்தவள் அமைதியாய் நின்றாள். “இந்த நேரத்துல நீ எங்கயும் போக கூடாது. இன்னைக்கு நைட்டு இங்க தான் இருக்கணும். காலைல வேணுனா உன்னோட வீட்டுக்கு போ” என்றார் அகல்யா.

 

அவருக்கு, தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்துவிடுவாளோ என்ற இயல்பான பயம் தான். மற்றபடி அனாதரவான ஒரு பெண்ணை இரவு வேளையில் தனியே விட அவருக்கும் விருப்பம் இல்லை. நந்தனிடம் வீம்பாய் மறுத்தவள் அதிகாரமாக பேசிய அகல்யாவிடம் சரி என்பதாய் தலையை மட்டுமே ஆட்டினாள். “அந்த ரூம்ல உனக்கு வேண்டியதுலாம் இருக்கும். நீயும் போய் குளிச்சுட்டு வா சாப்பிடலாம்” என்றவர் கீழே இருந்த ஒரு அறையை கைகாட்டினார்.

 

கீ கொடுத்த பொம்மை போல அவளும் தலையை ஆட்டிவிட்டு அந்த அறை நோக்கி சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் நந்தகோபாலனும் வந்துவிட, ப்ரியாவை தவிர அனைவரும் உணவு மேஜையை அலங்கரித்திருந்தனர். “ப்ரியாவை கூட்டிட்டு வரேன் இருங்க” என்று பொதுவாய் கூறிவிட்டு அகல்யா செல்ல முனைய, முத்தமிழோ “இருங்க அத்தை… நான் போய் அழைச்சுட்டு வரேன்” என்று இனி குட்டியை தூக்கிக்கொண்டு எழுந்தாள்.

 

பிரியா இருந்த அறை கதவை தட்டியவள் உள்ளே செல்ல, குளித்து விட்டு தலையை கூட துவட்டாமல் அமர்ந்திருந்த ப்ரியாவின் நிலை தமிழின் மனதை பிசைந்தது. “என்னங்க தலையை கூட துவட்டாம உட்கார்ந்து இருக்கீங்க” என்று இயல்பாய் தன் மகளை ப்ரியாவின் மடியில் அமர்த்திவிட்டு அருகில் இருந்த ஒரு துண்டை எடுத்து துவட்டிவிட்டாள் தமிழ்.

 

தமிழின் இயல்பான பேச்சிலும் நடவடிக்கையிலும் வானதியின் சாயலை உணர்ந்தாள் ப்ரியா. வானதியும் அப்படி தான் பிரியா அவசரமாக கிளம்பும் சமயத்தில் தலையை துவட்டிவிடுவாள். தன் மடியில் அமர்ந்திருந்த பிஞ்சின் ஸ்பரிசம் ப்ரியாவினுள் என்னவோ செய்தது. அவளுள் அப்பொழுது தான் வானதியின் மகவை பற்றிய எண்ணம் தோன்றி தீயாய் தகித்தது “எப்படி மறந்தேன் நான் எப்படி மறந்தேன்” என்று யோசனையில் உழன்றுக்கொண்டிருந்தவளை “வாங்க சாப்பிட போகலாம்” என்று இனி குட்டியை தூக்கியபடியே ப்ரியாவின் கையையும் பற்றி இருந்தாள் தமிழ்.

 

பிரியா இருக்கையில் அமர அனைவருக்கும் பரிமாறினார் அகல்யா. முதலில் இரண்டு இட்லியை ப்ரியாவின் தட்டில் வைக்க, அவளோ ஏதோ யோசனையாய் நந்தனை பார்ப்பதும் பின் தலையை குனிவதுமாய் இருந்தாள். ப்ரியாவையே பார்த்துக்கொண்டிருந்த அகல்யாவின் கண்கள் அதை குறித்துக்கொண்டது. ப்ரியாவின் அருகில் வந்தவர் அவளது தலையை மெல்ல வருடி “எதுவும் யோசிக்காத சாப்பிடு” என்றார்.

 

அவரது பேச்சிற்கு உட்பட்டவளாய் அந்த இரண்டு இட்லியையே கொறித்துக்கொண்டிருந்தாள். ஏனோ அகல்யாவின் பேச்சை தட்ட அவளுக்கு மனம் வரவே இல்லை. இப்படி யாரேனும் தன்னிடம் பேச தான் இவ்வளவு நாள் காத்திருந்தாள் போல. மூன்றாவதாக ஒரு இட்லியை அவள் தட்டில் வைத்தவர் நான்காவதாக மற்றோரு இட்லியை வைக்க போக அதே சமயம் சரியாய் அவளது கண்களில் திரண்டிருந்த கண்ணீர் அகல்யாவின் கையில் பட்டு தெறித்தது.

 

எத்தனை நாள் கனவிது!!! தன் பசியறிந்து யாரேனும் தனக்கு பாசமாய் பரிமாறமாட்டார்களா? தன்னையும் ஒரு குழந்தை போல் நடத்தமாட்டார்களா? என்று இதை அவள் யோசிக்காத நாள் இல்லையே, இன்று அந்த இரண்டுமே அவளுக்கு கிடைத்துவிட அவளும் அறியாமல் அவள் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் வெளிப்பட அதை உணர்ந்த அகல்யாவோ பதறியபடிய பிரியாவை பார்க்க தாங்க்ஸ் என்று முணுமுணுத்தாள் கிருஷ்ணபிரியா.

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.