(Reading time: 9 - 18 minutes)

அவள் கால் பதித்ததும் அந்த கல் பச்சை விளக்கினால் K என்ற எழுத்துடன் ஒளிர, கொஞ்சம் பயந்து பின் வாங்கினாள். அவள் பாதத்தை எடுத்ததும் அந்த விளக்கொளியும் காணாமல் போயிற்று. மீண்டும் அந்த கல்லின்மேல் பாதம் வைக்க அது ஒளிர்ந்தது. அவள் பாதத்தை எடுக்கவும் மீண்டும் அணைந்தது. ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அதன் மேல் தன் பாதத்தை வைத்து, எடுத்து என சிறிது நேரம் விளையாடியவள் பின் ஒவ்வொரு கற்களிலும் பாதம் பதித்து நடக்கலானாள். 

 

ஒவ்வொரு கற்களும் அவளது பெயரின் ஒவ்வொரு எழுத்துக்களுடன் ஒளிர்ந்தது. அதை உணர்ந்தவளின் முகத்தில் ஆயிரம் தாமரைகள் ஒரே நேரத்தில் மலர்ந்ததை போன்ற ஓர் மலர்ச்சி.     

 

சிறிது தூரம் வளைந்து வளைந்து சென்ற அந்த கல் பாதை ஒரு இடத்தில் நிறைவுற்றது. அதற்காகவே காத்திருந்தவன் போல ஒருவன் அவளிடம் சென்று “மேடம், சார் அந்த ரூம்ல இருக்காரு” என ஒரு சாவியையும், ஒரு ரிமோட்டையும் கொடுத்து ஒர் அறையை கைகாட்டியவன் அத்துடன் தன் வேலை முடிவுற்றது என சென்றுவிட்டான்.

 

என்ன நடக்கிறது என்பது புரியாவிடினும் ஒரு வித ஆர்வத்துடன் ப்ரியாவும் அவ்வறை நோக்கி சென்றாள். அந்த அறையும் இருளில் மூழ்கி இருக்க வாசலில் நின்றபடியே தன்னிடம் இருந்த ரிமோட்டை ஆன் செய்தாள். அவள் தலைக்கு மேல் கட்டியிருந்த பூக்கள் மழையாய் அவள் மேல் பொழிய அவ்வறை முழுவதும் வெளிச்சம் பரவி, நாட்டியத்தில் அவளின் ஒவ்வொரு பாவங்களும் புகைப்படமாய் அவ்வறை முழுதும் தொங்க விடப்பட்டிருந்ததை எடுத்துக்காட்டியது. தன் ஒவ்வொரு அசைவையும் புகைப்படத்தில் கண்ட பிரியாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.

 

சற்றே அவள் முன்னோக்கி செல்ல ஒரு பெட்டியின் மேலே "ப்ரெஸ் மீ" என எழுதப்பட்டிருந்த ஒரு பட்டனை அழுத்தினாள்.  அதை அழுத்தியதும் அதனுள் இருந்து "மைன் துமசே பியார் கர்தா ஹூன்"( இந்தி) என்ற வாக்கியத்துடன் ஒரு அட்டை வெளி வந்தது. அதை கையில் எடுத்தவள் ஒன்றும் புரியாமல் பே என முழித்தாள். இன்னும் முன்னே நகர அதே போல மற்றொரு சிறிய பெட்டி அதனுள் "சய சயாங் அவாக்" (மலாய்) என எழுதப்பட்டிருந்தது. இரண்டுமே என்னவென்பது அவளுக்கு சுத்தமாய் விளங்கவில்லை. 

 

இன்னும் முன்னே நகர அவ்வறையின் மற்றொரு கதவை வந்தடைந்தாள். அதை திறந்து செல்ல  அங்கே ஒரு வெண்கரடி வேசமிட்ட ஒருவன் அவள் கையில் ஒரு தாளை கொடுத்து முன்னே செல்லுமாறு கைகாட்ட, அவளும் அதை பிரித்து பார்க்க அதில் "சன் ரக் க்ஹுன்" (தாய்) என எழுதி இருந்தது. அதை படித்தவள், "என்ன டா இது எனக்கு வந்த சோதனை" என நினைத்த படியே முன்னேறினாள். 

 

மணி 7 ஐ நெருங்கி இருந்தது. அந்த அறைக்கு வெளியே வெட்ட வெளியாய்  இருக்க "இது என்ன இடம்? இவரு எங்க போனாரு?" என தனக்குள்ளே சிந்தித்தபடியே மணல் பரப்பில் நடந்து கொண்டிருந்தாள்.  

 

மூன்றாம் பிறை நாளில் நிலவொளிக்கு  பஞ்சமாய் போக அதை ஈடுகட்டவென வான் முழுதும் நட்சத்திரங்கள் பிரகாசிக்க, அதன் ஒளி கடலில் பிரதிபலிக்க, அலைகளின் நடுவே கடலின் கரையில் வெள்ளை மற்றும் நீல நிற துணிகளால் அலங்கரிக்கப்பட்ட மேடை அம்சமாய் நின்றிருக்க அதை  அடைய நடந்து போகும் வழியில் இருபுறமும் அதே  வண்ண விளக்குகள் ஒளிர  அவள் கண்ட காட்சி மிகவும் ரம்மியமாக, மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் அமைந்திருந்தது. அதை மனதார ரசித்துக்கொண்டிருந்தாள் பிரியா. அந்நேரம் சரியாய் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

 

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.