(Reading time: 15 - 29 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 03 - நா. பார்த்தசாரதி

  

வேணு மாமா இதமான குரலில் விசுவேசுவர சர்மாவிடம் சொல்லலானார்:-

  

"ரவி ரொம்ப நாளைக்கு அப்புறம் தூர தேசத்திலிருந்து திரும்பி வரான். அவன் கிட்டவும் அவன் கூட வர்றவாகிட்டவும் முகம் கோணாமல் நீங்க நடந்துக்கணும். குடும்பம் என்னும் அழகிய பிணைப்புத்தான் இந்திய வாழ்வின் சிறப்பு என்பதாக அவாள்ளாம் நினைக்கறா... இந்து அவிபக்த குடும்பம்ன்னு நாம் சொல்றோமே - இந்தக் கூட்டுக் குடும்ப அமைப்பு - இதன் பந்த பாசங்கள் எல்லாம் அவாளுக்குப் புதுமை. அவா கண் காணவே நாம் அப்பாவும் பிள்ளையும் எலியும் பூனையுமா அடிச்சிண்டு நிக்கப்படாது."

  

இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, தெருப்பக்கம் பார்த்தவாறே நாற்காலியில் அமர்ந்திருந்த வசந்தி, "மாமா! உங்க பொண் பாரு, உங்களைத் தேடிண்டு வரா" என்று சர்மாவிடம் கூறினாள். சர்மா தெருப்பக்கம் திரும்பினார். வசந்தி எதிர்கொண்டு போய்ப் பாருவை அழைத்து வந்தாள்.

  

"அப்பா! அந்தப் பூமிநாதபுரம் மாமா தேடி வந்தா. இன்னிக்கு 'லக்கினப் பத்திரிகை' எழுதணுமாம். ரெடியா இருக்கச் சொன்னார். இன்னம் ஒரு மணி நேரத்துலே வந்து அழச்சிண்டு போறாராம்."

  

"யாரு ராமசாமியா... வந்திருந்தான்? ஓகே...? இன்னிக்குச் சாயரட்சை பூமிநாதபுரம் நிச்சயதார்த்தத்துக்குப் போகணும்கிறதையே மறந்துட்டேன்."

  

"இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படறீர்... பூமிநாதபுரம் என்ன இங்கேயிருந்து அம்பது மைலா, அறுபது மைலா...? அகஸ்திய நதிப் பாலத்தைத் தாண்டினா அக்கரையிலே தானே இருக்கு...? கூப்பிடு தூரம். சூரியன் மலைவாயிலே விழறப்போ புறப்பட்டீர்னாப் போறுமே..." என்றார் வேணு மாமா.

  

சர்மாவின் பெண் பார்வதி பாவாடை தாவணி அணிந்திருந்தாள். பன்னிரண்டு பதின்மூன்று வயதுக்குள்ளேயே அதைவிட இரண்டு மூன்று வயது அதிகம் மதிக்கிற மாதிரி ஒரு வளர்த்தி. துறுதுறுவென்று களையான முகம். 'எச்சில் விழுங்கினால் கழுத்தில் தெரியும்' - என்பார்களே அப்படி நிறம். கருகருவென்று மின்னும் நெளியோடிய கூந்தலும் இலட்சணமான முகமும் சேர்ந்து ஒருமுறை பார்த்தவர்களை இன்னொரு முறையும் பார்க்க ஆசைப்பட வைக்கிற அழகு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.