(Reading time: 13 - 25 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 11 - நா. பார்த்தசாரதி

  

மலி, நாயுடு தன்னிடம் அளித்த பைனாகுலரை வாங்கிப் பார்த்தாள். பத்திருபது பெரிய யானைகள்.... இரண்டு மூன்று குட்டி யானைகள் - பைனாகுலரில் மிக அருகில் நிற்பது போல் தெரிந்தன. அதிக நேரம் ஓர் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி. அவளைத் தவிர மற்றவர்கள் அங்கே பலமுறை வந்திருந்த காரணத்தாலும், அடிக்கடி யானைக் கூட்டத்தைப் பார்த்திருப்பதாலும் அதில் அதிக ஆச்சரியம் காண்பிக்கவில்லை. யானைகளைப் பற்றிக் கமலி பல கேள்விகள் கேட்டாள். எல்லாக் கேள்விகளுக்கும் வேணுமாமாவும் சாரங்கபாணி நாயுடுவும் மாற்றி மாற்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

  

'எலிஃபெண்ட் வேலி'யிலிருந்து திரும்பும்போது கமலி நாயுடுவிடம் 'சாண்டல்வுட்' மரம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்றாள். சிறிது தொலைவு சென்றதும் ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்தி, நன்றாக முற்றிய சந்தன மரம் ஒன்றைக் கமலிக்குக் காட்டினார் நாயுடு. இடுப்பு உயரத்தில் அந்த மரத்தின் முற்றிய கிளை ஒன்று பிரிந்த இடத்தில் யாரோ காட்டு இலாக ஆட்கள் அரிவாளால் ஒரு சிறு வெட்டு வெட்டி விட்டுப் போயிருந்தார்கள். நாயுடு அந்த வெட்டு வாயில் மூக்கை வைத்து மோந்து பார்த்து விட்டு, "அப்பாடீ! வாசனை ஆளைத் தூக்கி அடிக்குது" என்று கூறி விட்டுக் கமலியையும் அதை மோந்து பார்க்கும்படி வேண்டினார்.

  

கமலி தலையைக் குனிந்து அந்த வாசனையை நுகர்ந்தாள். வைரம் பாய்ந்த அந்தச் சந்தனமரத்தில் வாசனை கமகமத்தது. இரண்டு மூன்று நாட்களில் அதே வாசனையுள்ள சந்தனக் கட்டை ஒன்றைக்கீழே கொடுத்து அனுப்புவதாக அவளிடம் நாயுடு கூறினார்.

  

அங்கிருந்து நேரே எஸ்டேட் பங்களாவுக்குத் திரும்பினார்கள் அவர்கள். ஜீப்பில் ரவியும் கமலியும் பின் ஸீட்டில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். ரவி உற்சாகமாக இருந்தான். மலைக்காற்றின் சுகமான குளிர்ச்சியும், அருவியில் நீராடிய மதமதப்பும் அவனுடைய உற்சாகத்தைப் பல மடங்காக்கியிருந்தன. அவன் கமலியின் காதருகே மெதுவாகக் கேட்டான்.

  

"கமலீ! என்னைப் பொறுத்தவரை நீயே ஒரு சந்தன விருட்சம். உன் உடம்பில் இல்லாத வாசனையா அந்தச் சந்தனமரத்தில் இருக்கிறது? நான் அநாவசியமாக ஜீப்பிலிருந்து ஏன் கீழே இறங்கவில்லை தெரியுமா? இளமையும் வாசனையும் கமகமக்கும் ஒரு சந்தன விருட்சம் இங்கே என் அருகிலேயே இருப்பது தான் காரணம்! என்ன? நான் சொல்வது உண்மை தானே?"

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.