(Reading time: 27 - 54 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

அறைப் பக்கமாக வந்தபோது அவன் என்னைப் பார்த்துவிட்டான்.

  

"என்ன? எங்கே போய் வருகிறாய்? அவனையா தேடுகிறாய்?" என்றான்.

  

"இல்லை தூக்கமாக இருந்தது. அதை மாற்றுவதற்காக இப்படி உலாவி வருகிறேன். நீ எழுந்து வரவேண்டா, படி நானும் போய்ப் படிக்கப் போகிறேன்" என்றேன்.

  

சந்திரனைக் காணாமலே என் அறைக்குத் திரும்பினேன். சரி, வெளியே யாருடைய வீட்டுக்கோ போயிருக்கிறான். காலையில் திரும்பி வந்துவிடுவான் என்று எண்ணி, படிப்பதற்காகப் புத்தகத்தை எடுத்தேன். படித்துக் கொண்டிருந்தபோது கதவு திறக்கும் ஒலி கேட்டு இருமுறை எழுந்து எழுந்து போய்ப் பார்த்தேன். அவனுடைய அறை பூட்டியது பூட்டியபடியே இருந்தது. மணி பத்து அடித்தது. சிறிது நேரம் படிப்பு, சிறிது நேரம் சந்திரன் நினைவு இப்படியே மாறி மாறிக் கழிந்தது. பக்கத்தில் உள்ள மரங்களிலிருந்து ஆந்தையின் ஒலியும் சுவர்க்கோழியின் ஒலியும் கேட்டன. தூக்கம் வந்தது. கடைசியாக எழுந்து போய் ஒரு முறை பார்த்துவந்து உறங்கிவிட்டேன்.

  

இரவு 2 மணிக்குத் திடீரென்று என் உறக்கம் கலைந்தது. இரவு முன்னேரத்தில் படுத்தால் எப்போதும் விடியற்காலம் வரையில் ஒன்றும் அறியாமல் ஆழ்ந்து உறங்குகின்றவன் நான். தேர்வு நாட்களில் கடிகாரத்தில் 4, 4 1/2 மணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தாலும், அலாரம் அடிக்கும் போது அந்தக் கடிகாரத்தின் மேல் வெறுப்போடும் ஆத்திரத்தோடும் எழுவேன். சில நாட்களில் எழுந்து நிறுத்தியதும் மறுபடியும் படுத்துவிடுவேன். வீட்டில் இருந்த காலங்களில் அம்மா மெல்லத் தட்டிக் கொடுத்து என்னை எழுப்பி உட்கார வைப்பார். அப்படி ஆழ்ந்து உறங்கும் வழக்கம் உடைய நான் அன்று எதிர்பாராமல் 2 மணிக்கு விழித்துக் கொண்டது எனக்கே வியப்பாக இருந்தது என் மனத்தில் இருந்த கவலையும் திகிலும் அதற்குக் காரணமாக இருந்திருக்கும்.

  

எழுந்து விளக்கிட்டுக் கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். எங்கும் ஒரே அமைதி நிலவியது. கிழக்குப் பகுதியில் தொலைவில் இரண்டு அறைகளில் மட்டும் விளக்கொளி தெரிந்தது. எம். ஏ. படிக்கும் மாணவர்கள் யாரேனும் இன்னும் உறங்காமல் தேநீர் குடித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கலாம்; அல்லது, முன்னேரத்தில் நன்றாகத் தூங்கிவிட்டு இப்போது விழித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணினேன். ஒருகால் சந்திரன் வந்திருக்கக்கூடும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.