அன்று முழுவதும் என் மனம் மிகச் சோர்ந்திருந்தது. அழகன், அறிஞன் என்று நான் போற்றிய நண்பன் இப்படி ஆகவேண்டுமா என்று எண்ணி எண்ணி மனம் களைத்துப் போயிற்று. முதலிலிருந்தே எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்தான்; என்னை நெருங்கவொட்டாமல் ஒதுக்கினான். என் நட்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் அன்போடு உதவி செய்ய முடியாமற் போயிற்று; சாமண்ணாவும் அத்தையும் அந்த அம்மாவும் கேட்டு எவ்வளவு வருந்துகிறார்களோ; கற்பகம் தன் அண்ணனை நினைந்து நினைந்து கதறுவாள் என்றெல்லாம் எண்ணிச் சோர்வு மிகுதியாயிற்று. மனத்தின் சோர்வு உடம்பையும் தாக்கவே, அன்றிரவு பத்து மணிக்குள்ளாகவே கொட்டாவி மேல் கொட்டாவி வந்தது. அயர்ந்து படுத்தேன்.
காலையில் எழுந்து பல் துலக்கிக் கொண்டிருந்தபோது "உன்னைத் தேடிக்கொண்டு யாரோ வந்திருக்கிறார்கள்" என்று என் வகுப்பு மாணவன் ஒருவன் வந்து சொன்னான். எதிர்பார்த்தபடி சாமண்ணா வந்திருந்தார். அந்த ஊர்ப் பள்ளியின் தலைமையாசிரியரும் வந்திருந்தார். என் கடிதத்தை அவர்கள் பார்க்கவில்லை. ஆகையால் விரிவாகச் சொன்னேன். சாமண்ணாவின் கண்கள் கலங்கின. அவரால் பேச முடியாமல் நாத்தழுதழுத்தது. "மகன் உயிரோடு வந்து சேர்ந்தால் போதும்; தேர்வு போகட்டும், படிப்பும் போகட்டும், அவனுடைய அம்மாவிடத்தில் இதோ உன் பிள்ளை என்று கொண்டுபோய்ச் சேர்த்தால் போதும். இல்லையானால், நான் அவளை உயிரோடு பார்க்கமுடியாது" என்றார்.
தலைமையாசிரியர் என்னையும் மாலனையும் தனியே அழைத்துப்போய், அந்தப் பெண்ணைப்பற்றிக் கேட்டார். அந்தப் பெண்ணும் அவனும் சேர்ந்து எங்காவது வெளியூர்க்கு ஓடிப்போயிருக்கலாம் என்றார். பெற்றோர்கள் செய்யும் திருமண ஏற்பாட்டை விரும்பாமல், அப்படிக் காதலர்கள் ஓடிப்போவது உண்டு என்று இங்கே நடந்ததும் அங்கே நடந்ததுமாகச் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டார். "இப்போது நேரே அந்தப் பெண் இருக்கும் இடத்துக்குப் போய் அங்கே கேட்டுப் பார்ப்பது நல்லது. ஒருவேளை அந்தப் பெண்ணே அங்கே இருந்தால் அவளையே கேட்டு விடுவோம். இதில் தப்பு ஒன்றும் இல்லை" என்றார்.
சாமண்ணாவை விடுதியில் என் அறையில் தனியே விட்டுவிட்டுப் போகலாம் என்றேன். தலைமையாசிரியர் அதற்கு உடன்படவில்லை. தனியே இருந்தால், அவர் மிகத் துயரப்பட்டுக் கலங்குவார் என்றார். அதனால் சாமண்ணாவையும் அழைத்துக் கொண்டு அந்தப் பெண்கள்