(Reading time: 32 - 63 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

அவளும் நடுதெருவில் நின்று கலங்க வேண்டுமா? ஒருக்காலும் நிலத்தை விற்றுப் பணமாகக் கொடுக்கமாட்டேன் என்கிறார். மகளை வைத்துக் கொண்டு வாழாவிட்டாலும் சரி நிலம் விற்பதற்கு இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார். அவர் சொல்வதும் ஒரு வகையில் நல்லதாகத் தெரிகிறது. நாளைக்கு என்ன துன்பம் வந்தாலும், பேரப் பிள்ளைகளுக்கு விற்க உரிமை வைத்து எழுதியிருப்பதால், அந்த ஐந்து காணி நன்செய் நிலமாவது கற்பகத்தைக் காப்பாற்றும், அவளுடைய குழந்தைகளைக் காப்பாற்றும், மனம் திருந்தி வந்தால் அவளுடைய கணவரையும் காப்பாற்றும்" என்றார்.

  

நான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், "அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை" என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே.

  

பழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல் வந்து உட்கார்ந்தேன். சந்திரனோடு விளையாடியும் படித்தும் காலம் போக்கியது நினைவுக்கு வந்தது. கற்பகம் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லையே, அவனுடைய குற்றம் குறைகளைப் பற்றிப் பேசவில்லையே. ஒருகால், அவனுடைய கதை பழங்கதையாய்ப் போயிருக்கலாம். திருத்த முடியாதவன் என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்.

  

உடனே கற்பகத்தின் தந்தையைப் பார்க்கவேண்டுமே என எண்ணி, நேரே அந்த வீட்டை நாடிச் சென்றேன்.

  

அங்கே அவருடைய பேரன் திருவாய்மொழி சில குச்சிகளையும் நெருப்புப் பெட்டிகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவர் ஒரு மூலையில் எதையோ ஆழ்ந்து சிந்தனை செய்தபடி உட்கார்ந்தவாறே சாய்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், "வாப்’பா, கற்பகம் சொன்னாள். நான் வந்து பார்க்கலாம் என்று இருந்தேன். அதற்குள் இவனை என்னிடம் விட்டுவிட்டு அவளே அங்கே போனாள்" என்றார்.

  

"இங்கே வந்திருக்கிறீர்கள்" என்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.