அழுத்தமானவர் போல் தெரிகிறது. ஒரு பைசாவும் கொடுக்கவில்லை" என்றார் லாரிக்காரர்.
"சே! அப்படிச் சொல்லக்கூடாது. நல்ல நன்செய் நிலமாக ஐந்து காணி மகள் பேரில் எழுதி வைத்திருக்கிறாராம்" என்றார் பக்கத்தில் இருந்தவர்.
"அதுசரி. நாளைக்கு வரும் பலாக்கனி இருக்கட்டும். இன்றைக்கு வேண்டிய களாக்கனி எங்கே?" என்றார் லாரிக்காரர். மறுபடியும் அவரே, "வந்த பெண்டாட்டியாவது இவருடைய மனம் தெரிந்து நடப்பவராகத் தெரியவில்லை. நான் ஒன்று சொல்கிறேன். மனைவி சரியாக இருந்தால் யாருக்குமே சாமியார் பைத்தியம் பிடிக்காது. இந்த ஆள் சாமியார் சாமியார் என்று யார் யார் பின்னாலோ சுற்றுகிறார். இந்த அளவுக்கு அந்த அம்மா இவரை விட்டிருக்கக் கூடாது. அந்த அம்மாவே வீட்டிலே பூசை பண்டிகை சடங்கு மந்திரம் தந்திரம் என்று பலவகையான அமர்க்களங்கள் செய்து கொண்டிருந்தால், இவருக்கு அதிலே சலிப்பு ஏற்பட்டுப் போயிருக்கும். இப்போது இவரே அல்லவா அவற்றை எடுத்துக்கொண்டு அலைகிறார்."
"அந்த அம்மா விட்டுக்கொடுத்து நயமாகப் பழகத் தெரியாத பேர்வழிபோல் இருக்கிறது" என்றார் பக்கத்தில் இருந்தவர்.
"ஆமாம் ஆமாம். எதற்கு எடுத்தாலும் சட்டம் பேசுகிற மனைவியாம். அதனால் ஒத்துப்போக முடியவில்லையாம். வாழ்க்கை ஏறுமாறாகப் போயிற்று. இவருக்குத் தெரியாதிருக்குமா? நாம் சொல்ல வேண்டுமா?" என்று சிகரெட் பெட்டியை எடுத்து என்னிடத்தில் நீட்டினார். நான் அன்போடு மறுக்கவே பக்கத்திலிருந்தவரிடம் நீட்டினார், இருவரும் புகைத்தார்கள்.
நான் பேசாமலே இருப்பது நன்றாக இருக்காது என்று எண்ணி, "ஆனாலும் கடன்பட்டு இந்த ஆலை தொடங்கியிருக்கக் கூடாது" என்றேன்.
"தொடங்கின பிறகு அக்கறையாகக் கவனிக்கவேண்டும். இது என்ன ஆபீஸ் வேலையா? ஐந்து மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு துண்டை உதறித் தோள் மேல் போட்டுக் கொண்டு போகக்கூடிய வேலையா இது? அங்கே வேலைக்கு ஒரு நேரம், பொழுதுபோக்குக்கு ஓர் இடம், சாப்பாட்டுக்கு ஓர் இடம் ஒரு நேரம் என்று எல்லாம் ஒழுங்காக இருக்கும். இங்கே வியாபாரத்தில் இந்தத் தொழிலில் நடக்குமா? காலையில் எழுந்து பல்லைத் துலக்கிக்