யாரோ ஒரு பையன் என் பக்கத்தில் வந்து நின்று, "அய்யா! யாரோ ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்" என்று சொன்னான். அவனுடன் வேறுயாராவது வந்திருக்கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். ஒருவரும் இல்லை, என்னைத்தான் சொல்கிறான் என்று உணர்ந்தேன்.
மைத்துனரும் தங்கையும் எழுந்து வந்து அன்போடு வரவேற்றார்கள். ஊரில் அம்மா அப்பா பொய்யாமொழி எல்லோரைப் பற்றியும் கேட்டார்கள், பாக்கியத்தைப் பற்றியும் கேட்டார்கள், என் மனைவியைப் பற்றியும் குழந்தை மாதவியைப் பற்றியும் கேட்டார்கள்.
அந்தப் பையன் வந்து, அய்யா என்று விளித்தது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. "யார் அந்தப் பையன்?"
"எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் படிக்கிற மாணவன்" என்றார் மைத்துனர்.
"சார் என்று அழைக்காமல் அய்யா! என்று விளிக்கிறானே" என்றேன்.
"சார் சார் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த ஊருக்கு வட நாட்டார் ஒருவர் வந்தார். சார் சார் என்று மாணவர்கள் சொன்னது அவருக்கு வெறுப்பாக இருந்தது. 'உங்கள் நாட்டில் சிதம்பரம் பிள்ளை, பாரதியார், போன்ற பெரிய பெரிய தேசபக்தர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனாலும், அந்நியமோகம் இப்படி இருக்கிறதே. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் சார் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறீர்களே. நம்முடைய தாயாரை டியர் மதர் என்று அழைத்தால் நன்றாக இருக்குமா? நாங்கள் எங்களை மறந்திருக்கும்போதும் சார் என்று சொல்லமாட்டோம். எங்கள் தாய்மொழியில் 'ஜீ' என்றுதான் சொல்வோம். வேண்டுமானால் எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள் பள்ளிக்கூடம், கடைத்தெரு, ஆபீஸ், விளையாடும் இடம், உணவுக்கடை எங்கே வேண்டுமானாலும் வந்து பாருங்கள். எங்கள் நாட்டார் ஜீ ஜீ என்று தான் ஒருவரை ஒருவர் அழைப்பார்கள். இங்கே கிராமங்களில் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளையே இப்படி கெடுக்கிறீர்களே' என்று மிக மிக வருத்தப்பட்டார். அவருடைய உருக்கமான பேச்சைக் கேட்ட பிறகுதான், நாம் செய்யும் தவறு எனக்குப் புலப்பட்டது. அன்று முதல் மாணவர்களுக்குச் சொல்லி மாற்றிவிட்டோம்" என்றார் மைத்துனர்.
பிறகு தங்கையின் எளிய குடும்ப வாழ்க்கையைக் கண்டேன். ஒரு கட்டிலும் இல்லை.