கொண்டு வந்து விட்டால், தொழில் பொழுது போக்கு சாப்பாடு வேடிக்கை வம்பு தூக்கம் எல்லாம் இங்கேயே வைத்துக் கொண்டு பன்னிரண்டு மணி நேரமோ இருபது மணி நேரமோ இருந்தே ஆகவேண்டும். அப்படி இருந்தால் வேலையாட்களை வேலை வாங்க முடியும். சில நாட்களில் நெருக்கடியாக இருக்கும்போது மனைவி மக்கள் நினைவும் எங்களுக்கு வருவதில்லை. உங்கள் நண்பர் ஒரு நாளாவது அப்படி ஆலையில் உட்கார்ந்து வேலை செய்திருப்பாரா? கேட்டுப் பாருங்கள். ஒரு தொழிலில் இறங்கினோமா, ஒரே உறுதியாக இறங்கிவிடவேண்டும். அப்புறம் வேறு எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. வேறு எதிலும் ஈடுபடக்கூடாது" என்றார்.
"நீங்கள் சொல்லக்கூடாதா?"
"இந்தக் கல்வி எல்லாம் சொல்லி வரக்கூடாது. சொல்லாமலே பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?" என்றார்.
"அப்படியும் சொன்னோம். பயன் இல்லை" என்றார் பக்கத்தில் இருந்தவர்.
அப்படியே சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து அவர்களோடு தேநீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.
வள்ளிமலைப் பக்கமாகப் போகும் பஸ் பற்றிக் கேட்டு நடந்தேன். பஸ் ஏறி உட்கார்ந்தவுடனே மாலனுடைய நண்பர்கள் சொன்னவற்றை எல்லாம் எண்ணி எண்ணி அவனுக்காக வருந்தினேன். கற்பகத்தைப் பற்றி அவர்கள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சாமண்ணாவைப் பணத்தில் அழுத்தக்காரர் என்று சொன்னதுபோல், அதுவும் பொய்யோ; எல்லாம் மாலன் வேண்டுமென்றே அவர்களிடம் சொல்லி வைத்த பொய்கள் என்று உணர்ந்தேன்.
வள்ளிமலையில் இறங்கித் தங்கையின் கணவருடைய பேரைச் சொல்லி, ஆசிரியர் வீடு எங்கே என்று கேட்டுச் சென்றேன். வீட்டின் வாயிலில் நின்றதும் தங்கை ஏதோ புத்தகம் படிப்பது கேட்டது. மைத்துனர் பாயில் படுத்தவாறே கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். என்ன புத்தகம் என்று அறிவதற்காக அமைதியாக நின்றேன். சாரதாமணி அம்மையார் என்று பெயர் கேட்டதால் அவருடைய வரலாறாக இருக்கலாம் என்றும் எண்ணினேன். அதற்குள்