"என்ன செய்வது? பிள்ளையையும் பெண்ணையும் பெற்று வளர்த்து விட்டுவிட்டு, அவள் சுகமாகப் போய்விட்டாள். கவலை எல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. பிள்ளையால் துன்பப்பட்டால் பெண்ணால் சுகப்படலாம் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டு வகையிலும் துன்பமே. ஊரில் இருக்க முடியவில்லை. பையனுடைய நடத்தை குடும்பத்திற்கே பழியாகிவிட்டது. உனக்குத் தெரிந்திருக்கும். அவனுடைய உடம்பும் கெட்டுவிட்டது; அது தெரியுமா?" என்றார்.
"தெரியாதே" என்றேன்.
"தொழுநோய் போல வந்துவிட்டது. உடம்பெல்லாம் பரவிவிட்டது. நாட்டு மருந்து சாப்பிட்டுப் பயன் இல்லை. இப்போது அடிக்கடி ராணிப்பேட்டைக்குப் போய் ஊசி போட்டுக்கொள்கிறானாம். அது எப்படியாவது போகட்டும் என்றால், அவனுடைய மனைவி - நல்ல பெண் - அவனிடத்தில் அகப்பட்டுக்கொண்டு சிறுமைப்படுகிறாள். அவளை மிருகம் போல் நடத்துகிறான், அடிக்கிறான், உதைக்கிறான். அதை எல்லாம் கண்ணால் பார்த்துக்கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. சாப்பிடவும் மனம் வரவில்லை. நாங்கள் வந்துவிட்டால், கணவனும் மனைவியும் தனியே வாழும்போதாவது அன்பாக இருக்கட்டும் என்றுதான் வந்துவிட்டேன். அந்தப் பெண்ணோ, நாங்கள் புறப்பட்ட போது கதறிக் கதறி அழுதாள். தானும் எங்களோடு வருவதாகச் சொல்லி அழுதாள். எங்கள் குடும்பம் இப்படி இந்த நிலைக்கு வரும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லையே" என்று அவர் கண்ணீரோடு கூறினார். பிறகு "மருமகன் செய்தி எல்லாம் சொல்லியிருப்பார்கள். நான் வேறு சொல்ல வேண்டியதில்லை. நல்ல பிள்ளை என்று எல்லாரும் சொன்னார்கள். நீயும் எழுதியிருந்தாய். அவன் இப்படி மாறிவிட்டான். எல்லாம் நான் வந்தவழி" என்று தலையில் அடித்துக் கொண்டு வருந்தினார்.
சிறிது நேரம் பேசியிருந்து ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினேன். அவருடைய மனத்தில் மகளைப் பற்றிய கவலையைவிட மகனைப் பற்றிய கவலையே மிகுதியாக இருந்ததை அறிந்தேன். கற்பகம் முதலானவர்களுக்குச் சந்திரனுடைய வாழ்க்கை இயற்கையாகிப் பழங்கதை ஆகிவிட்டது. ஆனால் சாமண்ணாவின் மனத்தில் அது இன்னும் ஆறாப் புண்ணாகவே இருந்து வருத்தி வந்தது.