Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 23 - சரோஜா ராமமூர்த்தி
2.23. பெண்மையின் பலஹீனம்
ஸ்ரீதரனின் மனசில் கெட்டவை நிற்பதில்லை. நல்லவைகள் நிலைத்து நின்று. உருவாகிப் பயன் பெற்று நிலவும். மூர்த்தியைப்பற்றி அவர் மனசிலே ஒன்றுமே இல்லை. தங்கையின் கணவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. அதைப்பற்றி அவர் அக்கறை காட்டும்படி ராதாவும் நடந்து கொள்ள வில்லை. 'கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவ்வளவு தான் நமக்கு வேண்டியது என்று இருந்து விட்டார். மூர்த்திக்கு என்ன சம்பளம் வருகிறது? அதை அவன் எப்படி செலவழிக் கிறான்? என்றெல்லாம் அவர் ஏன் ஆராயப் போகிறார்? தங்கைக்கு வேண்டிய புடவைகள், இதர சாமான்களை ஜெயஸ்ரீக்கு வாங்கும்போது வாங்கித் தந்து விடுவார். சில சமயங்களில் அவர்களே வாங்கி வந்து 'பில்'லை மட்டும் அவர் மேஜைக்கு அனுப்பி விடுவதும் உண்டு.
டாக்டர் காமாட்சியிடமும் அவர் இதைப்பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். "என் எதிரில் ராதா அவள் கணவனுடன் பேசியே பார்த்ததில்லை. இருவரும் வெட்கப்பட்டுக் கொண்டு என்னைக்கண்டதும் விலகிப் போய் விடுகிறார்கள்" என்றார்.
"அப்படியா? கல்யாணத்துக்கு முன்பு ரொம்பவும் நெருங்கிப் பழகியவர்கள் ஆயிற்றே! இப்படி இருப்பது அதிசயம் தான்" என்றாள் காமாட்சி.
இந்த விஷயத்தை அவள் தன் தகப்பனாரிடம் கூறிய போது அவர் ஆச்சரியம் அடையவில்லை. என்னவோ, அந்தப் பிள்ளையிடம் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார்.
சுவாமிநாதனுக்கு மட்டும் மனசிலே ஏதோ ஒரு சந்தேகம் சூழ்ந்து கொண்டிருந்தது. பல இரவுகள் மாடியில் ராதா மெதுவாக விசும்பும் குரலை அவர் கேட்டிருக்கிறார். அவளுடைய கண்கள் சிவந்து முகம் வீங்கி இருந்ததையும் அவர் பார்த்தார்.
"ஏனம்மா! உடம்பு சரியில்லையா?" என்று கூட விசாரித்தார்.
”ஆமாம். நேற்றிலிருந்து ஜலதோஷம்" என்றாள் ராதா.