மூர்த்தி திகைத்து நின்றான். சட்டென்று தன் பெட்டியைத் திறந்து கத்தை கத்தையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து வெளியே எறிந்தான்.
”உன் வைர வளையல்களை விற்ற பணம் தான் இது. இந்தா! இதை எடுத்துப் போய் மறுபடியும் நீ வைர வளையல் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறியவாறு கையில் ஒரு சிறு பெட்டியுடன் வீட்டை விட்டுப் புறப் பட்டான் மூர்த்தி. மாடியின் பின்புறமாக இறங்கி அவன் வேகமாகச் சென்று மற்றொரு ’கேட்' வழியாக வெளியில் செல்வதைக் கவனித்தாள் ராதா. கீழே கிடந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவசரமாக எண்ணிப் பார்த்தாள் அவள். மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் இருந்தன; அந்த நகை குறைந்தது ஐயாயிரம் பெறுமே.
புதிதாக வாங்கப் போனால் மேலேயே ஆகலாம். மூர்த்தி தன் கைச் செலவுக்குச் சில நூறுகளை வைத்துக் கொண்டு தான் பாக்கியை வீசி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டும் என்று ஊகித்தாள் அவள். மிச்சப் பணமாவது மிகுந்ததே என்று தான் அவள் நினைத்தாள். ’எந்தத் தமயந்தியோ, ரோகிணியோ அடைந்துவிட்டுப் போகட்டும்' என்று தியாகம் புரிய அவள் சித்தமாக இல்லை. நோட்டுக்களை எடுத்து, பீரோவில் வைத்துப் பூட்டினாள். சுவாமிநாதன் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வர அவள் கீழே வந்தபோது அவர் நிம்மதியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
ஜெயஸ்ரீக்கும் ஸ்ரீதரனுக்கும் உணவு பரிமாறி விட்டு ராதா தான் சாப்பிடாமலேயே மாடிக்குச் சென்றாள். மாடி வராந்தாவில் ஸ்ரீதரன் அவளைப் பார்த்து "ராதா! உன் புருஷன் இன்னும் வீட்டுக்கு வரவில்லையா? சற்று முன் உன் அறையில் பேச்சுக் குரல் கேட்டதே. வந்து விட்டான் என்றல்லவா நினைத்தேன்?" என்று கேட்டார்.
”வந்திருந்தார் அண்ணா, அவசரமாக வெளி யூருக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு உடனே புறப்பட்டுப் போய்விட்டார்..."
"சாப்பிட்டானா?"
"இல்லை, பசிக்கவில்லை என்று சொன்னார்….”