Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 21 - சு. சமுத்திரம்
சரோசா, போக மனமின்றி, போவது போல் போனாள். இப்போது குறுக்கு வழியில் நடக்காமல் பஸ்கள் போகும் சாலை வழியாக நடந்தாள். தனிமையில் நடக்க நடக்க, அவளுக்கு கால்கள் துண்டித்து தரையில் விழுவது போல் இருந்தது. மலைபோல நம்புன அண்ணாத்தே இப்படிச் செய்திட்டாரே. நேர்ல கூப்பிட்டு கன்னத்துலகூட இரண்டு போட்டு புத்திமதி சொல்லியிருக்கலாம். போலீஸ்ல அநியாயமாய் மாட்ட வைக்கிறதுக்குத் திட்டம் போட்டுருக்காரே... இன்னா மனுஷன்? அண்ணாத்தே காலுல போய் விழலாமா, வேணாமா? இவரு இன்னா அண்ணாத்தே? நானு நினைக்கிற மாதிரி அவரு நினைச்சிருந்தா இப்படிச் செய்வாரா? அண்ணாத்தே என்கிறது - நாய், நரி, பண்ணி என்கிறது மாதிரி ஒரு பேரு.
சரோசா, வேகவேகமாய் நடந்தாள். அவன் வாழும் இடத்திற்கே சென்று அங்கு இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்ற வேகம். அந்தச் சமயம் பார்த்து 'அண்ணன் காட்டிய வழியம்மா' என்ற பாட்டு; அவள் அழுது விட்டாள். துக்கம் தாங்காது சிற்சில இடங்களில் நின்று நின்று அழுகை சுமையை இறக்கி வைத்தாள். "நாயினா, நாயினா, நானு வெட்டுப்பட்டுப் போயிட்டா ஒனக்கி யாரு இருக்கா நாயினா?"
சரோசா, துரையின் வீட்டுக்குப் போகத்தான் நினைத்தாள். அவன் மனைவியின் தலைமுடியைப் பிடித்து, தன் பங்குங்கும் இரண்டு சாத்துச் சாத்த வேண்டும் என்று நினைத்தாள். துரையைப் பார்த்து "பொட்டப் பையா” என்று கேட்க வேண்டும் என்று நடந்தாள். ஆனாலும், துரை அண்ணன் வீட்டுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவன், இடுப்பு லுங்கி அவிழ்ந்து கிடக்க, டவுசர் பட்டை வெளியே தெரிவது தெரியாமல் கடற்கரையோ மேடு ஒன்றில் இரண்டு கைகளையும், பின்னால் ஊன்றியபடி, முதுகை வளைத்துப் போட்டு உட்கார்ந்திருந்தான். அவன் முன்னாலும், பின்னாலும் சிகரெட் துண்டுகள் கருப்பு முகமும், வெள்ளை உடலுமாகிக் கிடந்தன. ஆள்காட்டி விரலில் உள்ள சிகரெட் சுடுவது தெரியமலே அவன் அல்லாடினான்.
தனக்குத்தானே, பேசிக்கொண்டான் :
"இனிமேல் யாருக்காக வாழ வேண்டும்? எதுக்காக வாழ வேண்டும்? எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். பெட்டிக்கடை வெச்சி பிழைப்பு நடந்தப்போ இவள் பெட்டிப் பாம்பாத்தான் கிடந்தாள். ஒரு தடவ, நெருங்கின தோஸ்து ஒருத்தன் வீட்டுக்கு வந்திருந்தான். வெளியில்