Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 20 - சு. சமுத்திரம்
குறுக்கு வழியாக நடந்து, சரோசா பூக்கார ருக்குமணியின் குடிசைக்குள் வந்தாள். ஓட்டைக் கதவுதான்; கரடு, முரடு தரைதான்; தில்லு முல்லு கூரைதான்; ஒழுகல் காவாதான். ஆனாலும், அந்தக் குடிசையில் ஒரு கத்தம், ஒரு பூவாடை.
சரோசா நீட்டிய தூக்குப் பையை அதன் தாத்பரியத்துடன் வாங்கிக் கொண்ட ருக்குமணி கொதித்தாள்:
"நீயே அதுக்கு விஷச்சாராயம் குடிச்சுக் குடுமே; பாவி, கஸ்மாலம், அழிஞ்சு போவான்."
“சரி எனக்கு நேரமாயிட்டது, சரக்கு எடுக்கப் போறேன்.”
"இளங்கோ சொல்லச் சொன்னாருமே... சர்க்கார்வேலையிலே சேர்ந்தா ஒனிக்கும் நல்லதாம், ஒன் நயினாவுக்கும் நல்லதாம்.”
சரோசா, ருக்குமணியிடம் நடந்தவற்றை விவரமாக எடுத்துரைக்கப் போனபோது ஒருவன் ஓடிவந்தான். கோவிந்து என்று திட்டப்போன ருக்குமணி. முனுசாமியைப் பார்த்துவிட்டு கேள்விக்குறியுடன் நின்றாள். அவன் பாதி கிறக்கத்தோடு சொன்னான் :
"சரோசா! நீ வரப்போ நான் குடிக்கப்போனேனா... துரை சம்சாரம் டெலிபோன்லே, உன் பேரைச் சொல்றத கேட்டுட்டு ஒட்டுக் கேட்டேன். யார்கிட்டேயோ அவள் பேசிட்டு, அப்பாலே துரைகிட்டே ஒப்பிச்சாள். எவனோ அண்ணாத்தையோ, கிண்ணாத்தையோ, நீ வேலையில சேர்ந்தா ஆபத்துன்னு சொன்னாராம். அதனால நீ இன்னிக்கி சரக்கு எடுத்து வறப்போ ஒன்னை போலீஸ் மடக்குமாம். ஏற்பாடு செய்திட்டாராம். அவள், துரைகிட்டே சொன்னதும், அவன், அவள, போட்டுப் போட்டு உதைச்சான். வேடிக்கை பார்க்க நினைச்ச மனசை அடக்கிட்டு, உன்னே பாலோ பண்ணி வந்திட்டேன். ஏன்னா, நீ என்னோட தோஸ்து இளங்கோவுக்கு தோஸ்தாச்சே... சொம்மா இருக்க முடியுமா?"
முயல்போலப் பாயப்போன சரோசா, ஆமை போல் நின்றாள்.எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி ஏதோ ஒரு வாகனத்தின் சக்கரம் தலையில் ஏறியது போன்ற தடுமாற்றம். அது தலைக்குள்ளே சுழலுவது போன்ற அதிர்வு. அந்தத் தலையும், கழுத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு