சிரிச்சாரு. அண்ணாத்தே ஆள் வச்சி ஒருத்தர வெட்டின கோஷ்டியில அவனும் ஒருத்தன். மறுநாளு பார்த்தா... அந்த தோஸ்து கடலுல மிதக்கான். பொணமா மிதந்தான். அண்ணாத்தே எதுவும் தெரியாதது போல அந்தப் பொணத்த ஜோரா அடக்கம் பண்ணினாரு. 'பாவம் நல்லவன்'னு வேற துக்கமாச் சொன்னாரு. அப்பேர்ப்பட்டவரு அண்ணாத்தே.”
ருக்குமணியே பயந்துவிட்டாள். சரோசாவின் ‘அண்ணாத்தே’ எங்கும் வியாபித்திருப்பது போல் ஒரு பிரமை. அந்தக் குடிசைக் குள்ளும், அவர் வந்து நிற்பது போல் ஒரு அனுமானம். சரோசாவிற்கு சப்போர்ட் செய்ததற்காக தன்னையும் பட்டாக்கத்தியோடு குறிபார்ப்பது போன்ற ஒரு அச்சம். சிறிது நேரம் தடுமாறினாள். பிறகு குடிகாரக் கோவிந்துடன் குடித்தனம் செய்வதை விட, அப்படி வெட்டுப்பட்டாவது சாகலாம் என்று தெளிந்தாள். எல்லாவற்றையும்விட, இயல்பான மனிதாபிமான வேகம். அண்ணாத்தையை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு அசட்டுத் துணிச்சல். இப்போது, தானே சரோசா என்பது மாதிரி ருக்குமணி பேசினாள் :
"வல்லவனுக்கு வல்லவன், வையகத்துல உண்டுமே. ஒன் அண்ணாத்தே சாராயக் கொம்பன்னா, பாமாவோட அப்பா ரமணன் போலீஸ் கொம்பன். நீ வேலைக்குப் போகாமலேயே அண்ணாத்தே கூட இருந்தாலும், அவன் ஒன்ன ஏதாவது செய்யத்தான் போறான். இளங்கோவோட கவர்ன்மெண்ட் வேலையில சேர்ந்திட்டா, ஒனிக்கி அதுவே ஒரு பாதுகாப்பு. நம்ம கார்ப்பரேஷன் எச்சில் லாரி ஆளுங்க கூட ரோட்ல வண்டிய குறுக்கா வெச்சிட்டு பெரிய பெரிய கார்ல வர்றவங்களக் கூட எப்படி முறைக்காங்க! இதுக்கப் பேருதான் சர்க்கார் வேல. ஒண்ணாத்த பருப்பு ஒண்ணும் வேகாது."
"நீ நெனக்கிது மாதிரி எனக்குக் கொஞ்சம் பாதுகாப்புத்தான். ஆனால் அந்தப் படுபாவி இதுக்குக் காரணம் இளங்கோன்னு, பாவம் அந்த மனுஷன எதுவும் செய்திடப்பிடாதே. நானு பாவி, அவர ஆளுவெச்சி அடிச்ச காயமே இன்னும் முழுசா ஆறலே; அதுக்குள்ளே அண்ணாத்தே..."
‘அண்ணாத்தே... எவன்மே ஒனக்கு அண்ணாத்தே? தென்னமரம் காத்துல ஆடுறப்போ, அதுல இருக்கிற ஓணான், மரத்த தான்தான் ஆட்டுறதா நினைச்சி தலைய ஆட்டுமாம். அப்படிப்பட்ட ஓணான் பய உங்கண்ணாத்த, அவன், எங்க இளங்கோவ ஒண்ணும் ஆட்ட முடியாது. அவருக்குப் பக்கபலமாக அந்த கஸ்மாலம் சார் ரமணன் இருக்காரு. அவருக்கு அல்லா