Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 19 - சு. சமுத்திரம்
சரோசா, பல்லவன் பேருந்துக்குள் ஏறியவர்களை முண்டியடித்து, அவர்களை இறக்கியபடியே, கீழே இறங்கினாள். அடி கனத்த காகிதக் கவரை அணைத்துப் பிடித்தபடியே கோவில் வளாகத்திற்குள் விழுந்தடித்து ஓடினாள். அங்கே குத்துக்காலிட்டுக் கிடக்கும் நாயினாவைக் காணவில்லை. கோவில் வளாகத்திற்கு வெளியே மீண்டும் வந்து, கண்களை அங்குமிங்குமாக அலையவிட்டாள். அந்தக் கோவில் மதில் சுவருக்கு வெளியே சாத்தி வைக்கப்பட்ட பிணங்கள்போல் கிடந்த பிச்சைக் கூட்டத்தைப் பார்த்தாள். இளங்கோ, தனக்குத் தெரிவித்த எதிர்காலக் கணிப்பை மனதில் நிறுத்தியபடியே பார்த்தாள். அவிந்து போனது போல் கிடக்கும் பறட்டைத்தலை ஆயா, கால்கள் வேப்பங்குச்சியாய் வளைய, தரைதட்டிய வயிற்றுடன் கிடக்கும் சப்பாணிப் பையன், ரோகமே வடிவாய் புழுத்துக் கிடக்கும் தொழு நோயாளி இவர்களைப் போன்றவர்களில் ஒருத்தியாக, தான் அங்கே ஒரு காலத்தில் இருக்க வேண்டியிருக்கும் என்பதை நினைத்து, நினைத்து, அவள் நினைவற்று நின்றாள். அந்தப் பகுதியில் இப்போதே இடம் பிடிக்கப்போவது போல் பார்த்துவிட்டு அது தாளமாட்டாது கண்னை மூடிக்கொண்டாள்.
இந்தச் சிந்தனை பயத்தில் அவள் கரம் அந்தக் காகிதத் தூக்கின் நுனிக்கு வர, அதற்குள் கிடந்த கோழி பிரியாணிப் பொட்டலமும், ஆம்லேட் பார்சலும், தனியாகக் கட்டப்பட்ட தயிர் நனைத்த வெங்காயப் பச்சடியும் கீழே விழுந்தன. கையில் கனமற்றுப் போனதை உணர்ந்து கண்திறந்த சரோசா, கீழே கிடப்பதை எடுத்து பைஜாமாக்குள்ளும், சட்டை முந்தானைக்குள்ளும் திணித்தபோது, பெரிய பொட்டலம் பிதுங்கி சிறிது சோறும், ஒரு கறித் துண்டும் கீழே விழுந்தன. அவ்வளவுதான்... அந்த மதிலோரக் கூட்டம் வாய்பிளந்து அந்த இறைச்சித் துண்டையே கோரஸாகப் பார்த்தது. இதற்குள் அங்கே ஓடிவந்த சொறி நாய் அதைக் கௌவியபோது, அந்தப் பிச்சைக் கூட்டம் அந்த நாயைப் பொறாமையாகப் பார்ப்பதுபோல் பார்த்தது. சரோசாவையும் அண்ணாந்து பார்த்தது. அவள் பார்வையைப் புரிந்துகொண்ட பறட்டைத்தலை ஆயா, அவள் நயினா போன இடத்தை கைநீட்டி சுட்டிக்காட்டினாள். பஸ் நிலையம் இருக்கும் திசை.
சரோசா உடனடியாக நகரவில்லை. அந்தக் கூட்டத்தையே வெறித்துப் பார்த்தாள். வருடக்கணக்கில் பார்த்துப் பழகிய அந்தக் கூட்டம், இப்போது வேறு விதமாய் தோன்றியது. அவர்கள் பார்வையில், இவள் பார்வை இருளாகியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இடது கையை ஜாக்கெட்டுக்குள் விட்டு இருபது ரூபாய் நோட்டை வெளியே கொண்டு வந்தாள். அந்தக்