சரோசா, நாய்னாவை நகர்த்தி, கார்ப்பரேசன் குழாய் பக்கம் கொண்டுபோய், அவரது வாயைக் கழுவிவிட்டு, மணல் சிம்மாசனத்திலேயே அவரை உட்கார வைத்தாள். எதிரே, இரண்டு பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். தெரிந்தவர்கள்... சர்க்கார் வேலைக்காரர்கள்; ஆகையால் பத்து மணி ஆபீசுக்கு பதினோரு மணிக்குப் புறப்பட்டார்கள்.
'எப்படி அசத்தலா போகுதுங்க. தலையாட்றதிலையும், ஒரு இது... கை ரெண்டும் அப்படிச் சுத்தம், கடசல் உருளை மாதிரி. என் கை இருக்கே, துடப்பக் கட்ட... எனிக்கு என்ன குறயாம்? நானும் வேலைக்குப் போனா, அதுங்க மாதிரி, கொண்ட போடலாம்; ரெட்ட சடை போடுவேன். நாய்னாவுக்கு தீனி போடறதுக்கு இரும்புக் கம்பியை தூக்கவும் வாணாம், போலீசிலே பிடிபடவும் வாணாம். சர்க்கார் வேலையிலே சேர்ந்திட்டா வீடு குடுப்பாங்களாம்மே! நாய்னாவை அந்த மாதிரி வீட்லே வச்சுப் பாக்கிறதுக்கு எவ்வளவு ஆசையா கீது. ஆனால் அண்ணாத்தே...'
சரோசா, இத்தகைய சிந்தனை அழுத்தத்துடன், துரை அண்ணன் வீட்டுக்குப் பின்புறமாய் வந்து, பந்தல் வளாகத்திற்குள் நுழைந்தாள். பந்தலின் மணல் பரப்பில் ஒருவன் சுருண்டு கிடந்தான். இன்னொருத்தன் அவன்மேல் படுத்துக் கிடந்தான். ஒருத்தன், நண்டு இருந்த தட்டை நக்கினான்; இன்னொருத்தன் காலி கிளாசையே வாய்க்குக் கொண்டு போனான். சரோசாவுக்கு இளங்கோ சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. நண்டுத் தட்டை நக்குகிறவன் முகத்தைப் பன்றி முகமாகக் கற்பனை செய்து பார்த்தாள். வெறும் கிளாசை வாய்க்குக் கொண்டு போகிறவனை மனித முகத்தோடு கூடிய நான்குகால் நாயாக உருவகித்துப் பார்த்தாள். சிரிப்பும் வந்தது; சினமும் வந்தது; கூடவே சிறுமையும் ஏற்பட்டது.
சரோசா, செருப்புச் சத்தம் கேட்டு, வாசலைப் பார்த்தாள். ஒரு கையில் தேங்காயையும், மறு கையில் தூக்குப்பையையும் பிடித்தபடி, ஒருத்தன் உள்ளே வந்தான். பைக்குள் இரண்டு கிலோ அரிசி. சரோசா, அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியபடியே திட்டினாள்:
"இந்தாப்பா கோவிந்து! இனிமேக்காட்டி இந்தப் பக்கம் இப்டி வந்தே, நானே ஒன்னை ஒதைப்பேன். சரக்கு வேணும்னா, இதோ ஒன் பேண்ட மார்வாடிகிட்ட அடகு வை. வீட்ல அரிசி, தேங்காயை ஏய்யா திருடுற? போப்போ!"