Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 22 - சு. சமுத்திரம்
அந்த மருத்துவமனைக்கு எத்தனை தடவை சென்றாளோ, அத்தனை தடவையும் அவள் கேளாமலேயே, இளங்கோ தெரிவித்த அந்த அலுவலகத்தின் சாமுத்ரிகா லட்சணங்கள் சரோசா மனத்தில் அழமாகப் பதிந்துவிட்டன. ஆகையால், அந்த அலுவலகத்தை கேட்பார் பேச்சைக் கேட்டு லெப்டில் திரும்பி ரைட்டிலோ, ரைட்டில் திரும்பி லெப்டிலோ போகாமல் சொந்த முயற்சியிலேயே கண்டு பிடித்துவிட்டாள்.
காலையிலேயே பூக்காரத் தோழியின் வீட்டுக்குப் போனவள், "அந்த கஸ்மாலம் மாருவாடிக்கிட்ட வைக்கிறதுக்கு முன்னாடி நீ கட்டிக்கோ" என்று சொல்லி ருக்குமணி கொடுத்த புடவையையும், அதற்கேற்ற ஜாக்கெட்டையும் வாங்கிக்கொண்டாள். இதர இரண்டு, மூன்று சேலைகள் கொடியில் தொங்கியபோது, இந்தப் புடவை மட்டும் கரப்பான் பூச்சி வில்லைகள் போடப்பட்ட டிரங்க் பெட்டியிலி ருந்து வெளிப்பட்டது. எலுமிச்சை நிறம். பைஜாமாவை லேசாகச் சுருட்டி, அதையே பாவாடையாக அனுமானித்துக் கொண்டு, அதற்குமேல் புடவையைக் கட்டலாமா என்று சரோஜா சிறிது யோசித்தாள். பிறகு புடவையை சுற்றிக் கொண்டு பைஜாமாவைச் சுருட்டி ஒரு மூலையில் போட்டாள். ருக்குமணி அவள் நெற்றியில் பிளாஸ்டர் குங்குமத்தை ஒட்டினாள். சினிமாக்காரி மாதிரி ஜொலி த்த கில்டு செயினை பூட்டிவிட்டாள். இந்த அன்பைப் பொறுக்க முடியாமல், சரோசா கண்ணீர் விட்டபோது “பவுடர் நனைஞ்சு திட்டுத்திட்டா ஆயிட்டுப்பாரு. பவுடர் கொஞ்சமாத்தான்கீது. அதனால இதுக்குமேல் அழாதே” என்றாள் ருக்கு. “ஏம்மே கலங்குறே? நானிருக்கேன், இளங்கோ இருக்கார். ஒன் அண்ணாத்தே இன்னாப் பண்ணுறான் பார்க்கலாம். கண்ணாடி முன்னால போமே. எப்படி ஜொராக்கீறே தெரியுமா?” என்று ஆற்றுப் படுத்தினாள்.
சரோசாவை, ருக்குமணி பஸ் நிலையம்வரை வந்து வழியனுப்பி வைத்தாள். அந்தப் பல்லவன், இளங்கோ குறிப்பிட்ட அலுவலகத்திற்கு முன்னால் பஸ் நிலையத்தில் இருந்து அனைவரையும் ஓட்டப்பந்தயத்தில் பார்க்க விரும்பியது போல், இருபதடி தள்ளி நின்றது. சரோசா இறங்கினாள்.
அந்த இலுவலக முகப்பில் இரண்டு பிரிவுகளான இரும்பு கேட்டுகளில் ஒன்று மூடியிருந்தது. இன்னொன்று அரைக்கண் பார்வை போட்டது. அந்த ஒருகண் வழியாக உள்ளே போனாள். அங்குமிங்குமாய் பார்த்தாள். வலதுபக்கம் ஒரு தூக்கலான இடத்தில் சின்ன மணிக்கூண்டு மாதிரியான கட்டிடத்தில் காக்கிச்சட்டைக்காரர்கள் நின்றும், உட்கார்ந்தும், படுத்தும்