சாரே... வந்துட்டேன் சாரே”... என்றாள். இளங்கோவும் மீசைக்காரனிடம் சொன்ன ஒரு வார்த்தையை நடுவிலேயே விட்டுவிட்டு, அவளைப் பார்த்து 'ஹலோ' என்றான். அவன் தன்னிடம் பேசாமல் டெலிபோனில் பேசுகிறானோ என்பது மாதிரி பார்த்த சரோசாவை, நேருக்கு நேராய் பார்த்தபடி, ஏதோ ஒரு பெரிய எதிர்பார்ப்பு எதிர்ப்புகளுக்கு நடுவே நிறைவேறியது மாதிரியான கோபத்தனமான திருப்தியுடன் கேட்டான் :
"உன்ன பத்துமணிக்கே வரச்சொன்னேனே. இரண்டரை மணிக்கு வந்து நிக்கறியே."
"வந்துட்டேன் சாரே! பதினொரு மணிக்கெல்லாம் டான்னு வந்துட்டேன. இங்கேதான கணக்குல நிக்கறேன். உள்ள யாரும் விடல."
"ஏம்ப்பா இந்திரன்! உன்கிட்ட காலையிலேயே சொல்லி விட்டுத்தானே போனேன் : சரோசான்னு ஒரு பொண்ணு வரும், 'சேரி வாசனையை கண்டு விரட்டாமல் உள்ளே விடுன்னு, சொன்னேனே. கடைசியில நான் எதிர்பார்த்ததுமாதிரி ரிசப்ஷனையே ஜெயிலா மாத்திட்டியே."
“அய்யோ சாரே, நீங்க சொன்ன பொண்ணு இதுதானா? ஏம்மா, ஒன் பேர சொல்லப்புடாதா? சாரு கிட்ட கெட்டபேரு வாங்கிக் கொடுத்திட்டியே.'
இளங்கோ, மீசைக்காரனுக்குப் பதில் சொல்லாமல், எலுமிச்சைச் சாத எச்சங்களும், சட்னி துளிகளும் ஆக்கிரமித்த வரவேற்பு ரிஜிஸ்டரை எடுத்தான். நாள், நட்சத்திரம் போன்ற வகையறாக்களை எழுதிவிட்டு, சரோசாவை ஒரு கையெழுத்துப் போடச் சொன்னான். சரோசாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. 'அடேயப்பா! எம்மாம் பெரிய கவர்மெண்ட் ரிஜிஸ்டருல நானு கையெழுத்துப்போடறேன்; நைட்டு போய் நாயினாகிட்ட சொல்லணும்.'
இளங்கோ முன் நடக்க, சரோசா பின் நடந்தாள். வரவேற்பு வளையத்தைத் தாண்டி, பத்தடி இடைவெளி போன்ற பாதையில் நடந்து, எதிரேயுள்ள இரண்டு கண்ணாடிக் கதவுகளில் இளங்கோ ஒன்றைத் தள்ளினான். முரண்டுபிடித்த அந்தக் கதவு சரோசா மீது மோதாமல் இருப்பதற்காக அதைப் பிடித்துக் கொண்டான். சரோசா ஜம்மென்று நடந்தாள். வாசல் வளாகத்திலும், வரவேற்பு அறையிலும் அனுபவித்த சிறுமை, இப்போது சிறுத்துவிட்டது. மீசைக்காரனைப் பற்றி இளங்கோவிடம் சொல்லப் போனாள். பிறகு, வாயை மூடிக்கொண்டாள்.