Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 28 - சு. சமுத்திரம்
இன்ஸ்பெக்டர் கோபதாபமாக எழுந்தார். அருகே உட்கார்ந்திருந்த ‘எல் அன்டு ஒ' இன்ஸ்பெக்டரைப் பார்த்து அவர்தான் தனது நிலைமைக்குக் காரணம் என்பது போல் தன்னை அறியாமலே கத்தினார்:
"என்னப்பா இது, பொல்லாத செக்யூரிட்டி டியூட்டி. இந்த வாரத்திலேயே இது மூன்றாவது தடவை. குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் மணிக்கணக்கில் திண்டாடணும். போன சமயம் இப்படித்தான்: எவனோ தலகாஞ்சவன்னு ஒருத்தனத் திட்டிட்டீங்க. அவ்வளவுதான், அவன் குதியோ குதின்னுகுதிச்சான்.பிரஸ்மேனாம். அப்பப் பாத்து டெபுட்டி கமிஷனர் வந்தார். அடாபடியாப் பேசுற அவனைத் திட்டப் போறார்னு நெனைச்சேன். அவர் என்னடான்னா 'தொப்பியை கழத்தணுமாயா'ன்னு என்னைத் திட்டிக்கிட்டு அந்த ஜிப்பாப் போட்ட பிரஸ்காரன் தோளிலே கையைப் போட்டுக்கிட்டுப் போறார். வசவு வாங்குறதுக்குப் பெயரே செக்யூரிட்டி டியூட்டின்னு ஆகிப்போச்சு."
இந்தச் சமயத்தில், ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சபாரி உடைக்காரர் ஒருவர், ஐம்பது வயதுப் பெண்ணோடு உள்ளே வந்தார். அவர் கெஞ்சிய கெஞ்சல், அந்த உடைக்குச் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. முகமெல்லாம் வியர்த்து தரையில் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த அம்மா கணவனைப் பிடித்துக் கொண்டே ஏங்கி ஏங்கி அழுதாள்; அந்த மனிதர் அழுகைக் குரலில் புலம்பினார்;
"இன்ஸ்பெக்டர் சார்! நீங்கதான் சார் எங்களைக் காப்பாற்றணும். நீங்கதான் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கணும். நாற்பது வருஷமா டெல்லியிலே இருந்திட்டேன். செக்கரட்டேரியேட்டில் செக்ஷன் ஆபீஸரா போனமாசம்தான் சார் ரிட்டெயர்டு ஆனேன் . மூணு வருஷத்திற்கு முன்னால வாங்கிப் போட்ட நிலத்தில் வீடு கட்டலாமுன்ன வந்தால் அய்யோ..."
அவரால் மேற்கொண்டு பேசமுடியவில்லை; அதற்குள் இன்ஸ்பெக்டரும் அதட்டினார்:
"இது என்ன துஷ்டிவீடா ஒப்பாரி போடுறதுக்கு? சட்டுப்புட்டுன்னு விஷயத்தைச் சொல்லுங்க.”
எதையோ பெரிதாய் எதிர்பார்த்து ஒப்பிக்கப் போன அந்த அம்மா, தனது மெல்லிய தேகத்தை லேசாய் ஒடுக்கிக் கொண்டு, இன்ஸ்பெக்டரை திடுக்கிட்டுப் பார்த்தாள். பிறகு எந்திரக் குரலில்