வசந்தி பின் தொடர எதிரே வந்து கொண்டிருந்தாள் கமலி. ஒரு சிறு குழந்தையின் உற்சாகத்தோடு அவள் அந்தப் பூக்களைக் கொய்து நிரப்பிக் கொண்டு வருவது தெரிந்தது. சர்மா சிரித்தபடி அவர்களைக் கடந்து மேலே நடந்து சென்றார்.
கமலியை மாடியில் கொண்டு போய் விட்டுவிட்டுத் தான் வீட்டிற்குப் போய்விட்டு அரை மணி நேரத்தில் மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றாள் வசந்தி. வீட்டுக்குப் புறப்படு முன் ஞாபகமாகச் சமையலறை வாசலில் நின்று காமாட்சி மாமியைக் கூப்பிட்டுச் சிரித்துக் கொண்டே, "மாமி! பாயாசம் வையுங்கோ - பிள்ளை ரொம்ப நாளைக்கப்புறம் ஊர் வந்திருக்கிறதைக் கொண்டாட வேண்டாமோ?" என்று சொல்லி விட்டு வெளிப்படையாகச் சொல்லத் தயங்கிய கொண்டாட்டக் காரணத்தை மனத்தின் உள்ளே நினைத்தவளாகச் சென்றாள் வசந்தி. திரும்பி வந்து மல்லிகைப் பூவைத் தொடுப்பது எப்படி என்று கமலிக்குக் கற்றுக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்தாள் அவள்.
*****
விடிந்ததிலிருந்து வெய்யிலே தெரியாமல் சாரல் தூறிக் கொண்டிருந்ததால் அன்று சங்கரமங்கலம் மிக மிக அழகாக இருந்தது. மேற்குப் பக்கம் மலைத் தொடர்கள் மயில் கழுத்து நிற நிலத்தில் பளபளத்தன. மழைக் காலத்தில் மணப்பெண்ணுக்கு வருகிற அழகு போல் மலைகளுக்கு எல்லாம் வரும் பருவ அழகு ஒன்று உண்டு. அப்படி அழகு அந்த மலைகளில் அன்று வந்து கவிந்திருந்தது. காலையில் இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து திரும்பியதற்காக மறுபடி ஒரு தடவை ஸ்நானம் செய்துவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்தார் சர்மா.
காலைப் பூஜை என்பது அந்த வீட்டில் முக்கியமானது. சுமார் முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை பிடிக்கும். காமாட்சி அம்மாள் சாம்பிராணி தூபக்காலில் உருகிய பொன்னாய் மின்னும் நெருப்பை எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். பார்வதி குளித்து உடைமாற்றிக் கொண்டு தோட்டத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய பூக்களைக் கொய்து கொண்டு வந்து வைத்தாள்.
"பாரு! அண்ணா குளிச்சிருந்தான்னாக் கீழே வரச் சொல்லும்மா!" என்று பார்வதியிடம் பூஜையின் நடுவே சொல்லியனுப்பினார் அவர். பார்வதி மாடிக்குப் போனாள். காமாட்சி