அம்மாள் சர்மாவைக் கடிந்து கொண்டாள்.
"அவனை ஏன் சிரமப்படுத்தறேள்? ரெயில்லே அலுத்துக் களைச்சுப் போய் வந்திருக்கான்... மெல்ல வரட்டுமே?"
"ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கான். பூஜைக்கு வரட்டுமே!"
காமாட்சியம்மாள் நைவேத்தியத்தை மூடி எடுத்துக் கொண்டு வருவதற்காக உள்ளே போயிருந்தாள். ரவியும் கமலியும் அவர்களை அழைக்கப் போயிருந்த பார்வதியும் மாடியிலிருந்து வந்தார்கள்.
ரவி நாலு முழம் வேஷ்டியும் மேலே சட்டையோ பனியனோ போடாமல் ஓர் அங்கவஸ்திரமும் அணிந்திருந்தான். பழைய காலத்துச் சுங்குடிப் புடவை டிசைனில் ஆனால் புதிய நவநாகரிக மஞ்சள் நிற வாயிலில் நீலப் புள்ளிகள் இட்ட மெல்லிய புடவை ஒன்றை அணிந்திருந்தாள் கமலி. நெற்றியில் குங்குமத்திலகம், ஷாம்பு போட்டு நீராடியதால் புஸுபுஸு வென்று கூந்தல். மேலே பொன் நிறத்தில் தோள் பட்டையோடு துடிகிற கையில்லாத 'ரவிக்'கை அணிந்திருந்தாள். உடலை இறுக்கினாற் போலத் தைக்கப்பட்டிருந்த அந்த 'ரவிக்'கையும் அவளுடைய செழிப்பான மேனி நிறத்தையும் கூர்ந்து கவனித்துத் தான் பிரித்தறிய வேண்டியிருந்தது. அந்த உடையில் அந்த வேளையில் நறுமணங்களின் உருவகமாய் ஒரு நளினமான கவிதையாய் பூஜை அறைக்கு முன் வந்து நின்றாள் கமலி.
அவள் முதலிலேயே குளித்து விட்டு வந்ததால் அவளை டிரஸ் செய்து கொள்ள விட்டு விட்டு ரவி குளியலறைக்குள் போயிருந்தான். அவள் பின் தங்கவிட்டுச் சென்ற மனத்தை மயக்கும் நறுமணங்கள் குளியலறையை முழுமையாக நிறைத்துக் கொண்டிருந்தன. அவள் உபயோகித்த ஷாம்பு, சோப்பு துவட்டிக் கொண்டு போட்டிருந்த டர்க்கி டவல் எல்லாமாகச் சேர்ந்து - காலை வரையில் சுண்ணாம்பு சிமெண்ட் வாடை மட்டுமே நிரம்பியிருந்த புதிதாகக் கட்டப்பட்ட அந்தக் குளியலறையை இப்போது நறுமணங்கள் நிறைந்த கந்தர்வ லோகமாக்கியிருந்தன.
அவன் நீராடி விட்டு வெளியே வந்த போது கமலி ஏறக்குறைய டிரஸ் செய்து முடித்திருந்தாள். அவள் 'ரவிக்'கை அணிந்திருந்ததை அவன் அப்போது தான் கவனித்தான். சொல்லி வேறு ஏதாவது கையுள்ள ரவிக்கையை மாற்றிக் கொள்ள வைக்கலாமா என்று ஒரு கணம்