மைனஸ் பாயிண்டாக் கணக்கிடறது அவ்வளவு சரியில்லை."
தன் அம்மாவிடம் குறைகளும் முரண்டுகளும் உண்டு என்று தானே சொல்வதைக் கூட அவள் ஒப்புக் கொள்ளாமல் மறுப்பதை அவன் அப்போது கவனித்தான். அம்மா பம்பரமாகச் சமையலறையில் வேலை செய்வது, பூஜை செய்வது, காலையில் நீராடியதும் துளசி வழிபாடு, பசு வழிபாடுகள் செய்வது, பல்லாங்குழியாடுவது, வீணை வாசிப்பது, ஸ்தோத்திரம் ஸ்லோகம் சொல்லுவது, எல்லாமே கமலிக்கு அதிசயமாக இருப்பதை அவன் கண்டான். தான் அளித்திருந்த பயிற்சிகள், பழக்க வழக்கங்கள், முன் தகவல்கள், அவளை ஓரளவு இந்திய வாழ்க்கைக்கு எந்தவிதத் தயக்கமுமின்றிப் பொருந்த வைக்கும் என்று அவன் அறிந்திருந்தாலும் இப்போது இங்கே வந்த பின் தான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவும் அவள் அதற்குக் கனிந்து பொருந்திப் பக்குவப்பட்டிருப்பது தெரிந்தது அவனுக்கு.
"உங்கள் அம்மா புடவை கட்டிக்கொள்வது போல் நானும் கட்டிக் கொண்டு பார்க்க வேண்டும் போல் எனக்கு ஆசையாயிருக்கிறது. அதைக் கற்றுக் கொடுப்பதற்கு நாளைக்கு வசந்தியை வரச் சொல்லியிருக்கேன்" - என்று தனது ஒரு விருப்பத்தைக் கமலி வெளியிட்ட போது அவனுக்கு வியப்பாகக்கூட இருந்தது. மடிசார் வைத்துப் புடவை கட்டுவது அநாகரிகமாகவும் பத்தாம் பசலித் தனமாகவும் ஆகி அப்படிக் கட்டுவதை வழக்கமாகக் கொண்டவர்களே அதிலிருந்து விடுபட்டுத் தங்களை அந்நியப் படுத்திக் கொண்டு மாறி வரும்போது எங்கோ ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு யுவதி இப்போது அதற்கு ஆசைப்படுவது மிகவும் விநோதமாயிருந்தது.
*****
மறுநாள் காலையில் இறைமுடிமணி வடக்குத் தெருவில் மடத்து மனையில் தாம் தொடங்கும் புதுப் பலசரக்குக் கடைத் தொடக்க விழாவுக்கு வந்து கூப்பிட்டு விட்டுப் போனார். அவர் வந்த போது சர்மா எங்கோ வெளியே போயிருந்தார். ரவியிடமும் கமலியிடமும் தான் வந்த விவரம் சொல்லி விட்டுப் போயிருந்தார் அவர்.
"தம்பீ! உங்க அப்பாருக்குச் சம்மதம் இல்லாம இருக்கலாம். ஆனா எங்க இயக்க வழக்கப்படி ஐயா படத்தை மாட்டி நல்ல ராகுகாலமாப் பாத்துத்தான் நான் கடை தொறக்கறேன். அது என் கொள்கை சம்பந்தப்பட்ட விசயம். நட்புக்காக அவரை அழைக்கிறேன். முடிஞ்சா