குதிச்சார். சாமி பூதம் இல்லேங்கிற சு.ம. ஆளுக்கு மடத்து எடம் வாடகைக்குப் போறது பெரிய அக்ரமம்ன்னார். என்னைத் திட்டினார். முந்தாநாள் மடத்து நிலங்களைக் குத்தகைக்கு விட்டபோதும் அவர் சொன்னபடி எதையும் கேட்காம நான் நியாயமானவாளுக்காப் பார்த்து விட்டேன். அதிலே வேறே அவருக்கு என் மேலே மகா கோபம். இதுக்கு முந்தின கூட்டத்திலே அவருக்கு வேண்டிய பினாமி ஆள்களாச் சேர்த்துண்டு வந்து அவாளுக்கே எல்லா நிலத்தையும் குத்தகை முடிச்சிடப் பார்த்தார். நான் விடலே. கூட்டத்தையே அன்னிக்கி ஒத்திப் போட்டுட்டேன்."
"சரி. இதிலே வருத்தப்படறத்துக்கும் தயங்கறத்துக்கும் என்ன இருக்கு? எது நியாயமோ அதைத்தானே செஞ்சிருக்கேள்?"....
"வருத்தம் ஒண்ணும் படலேடா! அங்கே போறதுக்குத் தான் தயக்கமாயிருக்கு. ராகுகாலம், ஐயா படம்னு நீ வேற என்னென்னமோ சொல்றே. ஒண்ணொண்ணும் சீமாவையருக்கு எனக்கெதிரா ஒரு கலகத்தை மூட்டறதுக்குத் தான் பிரயோஜனப்படும்... கொள்கை எப்படி இருந்தாலும் தேசிகாமணியைப் பொறுத்தவரை யோக்கியன்..."
"நீங்க தயங்கறது ரொம்ப வேடிக்கையாத்தான் இருக்குப்பா! அயோக்கியன் ஒருத்தன் என்ன நினைச்சுப்பானோன்னு பயந்து யோக்கியன் ஒருத்தனை மதிக்கவும் ஆதரிக்கவும் தயங்கி நின்னுடற சுபாவம் நம்ம தேசத்துக்கே 'ஸ்பெஷாலிட்டி'யாப் போச்சு. மனத்தினால் சமூக விரோதிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் பயந்து நடுங்கிக் கொண்டே கையால் தெய்வத்தைக் கூப்பித் தொழும் தேசம் இது. நியாய வேட்கையும் அந்தரங்க சுத்தியோடு கூடிய சத்திய தரிசனமும் இல்லாத பக்தி கூடப் பிரயோஜனமில்லாத விஷயம் தான். யாரோ ஒரு கெட்டவன் என்னமோ நினைச்சுக்கப் போறான்கிறதுக்காக நீங்க உங்க பரம சிநேகிதரோட அழைப்பைப் பொருட்படுத்தாம விடறது எனக்குப் பிடிக்கலே. நீங்க வரேளோ, வல்லியோ; என்னையும் கமலியையும் அவர் கூப்பிட்டிருக்கார். நாங்க நிச்சயமாப் போகப் போறோம்."
"அதுக்குச் சொல்லலே... சரி... நானும் வரேண்டா.... சேர்ந்தே போயிட்டு வந்துடலாம்"... என்று ஒரு நிமிடத் தயக்கத்திற்குப் பின் சர்மாவும் வருவதற்கு இசைந்தார். ஆனால் அவர் மனம் இன்னும் நிம்மதியிழந்த நிலையில் தான் இருந்தது என்பதை முகம் காட்டியது. அவர் மனத்துக்குள் இன்னும் தயக்கம் தான் நிலவியது. மகனோடும் அவனோடு வந்திருக்கிற பிரெஞ்சு யுவதியுடனும் சேர்ந்து ஒன்றாகச் சங்கரமங்கலத்தின் வம்புகள் நிறைந்த தெருக்கள்