'இவுங்களையும்' கூப்பிட்டுக்கிட்டு வாங்க" என்று கமலி பக்கம் சுட்டிக் காட்டி ரவியிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார் இறைமுடிமணி.
குமார் கல்லூரிக்கும், பார்வதி தனது பள்ளிக்கும் புறப்பட்டுப் போனபின் காலை ஒன்பதரை மணிக்கு மேல் அப்பா வீட்டுக்குத் திரும்பி வந்ததும் ரவி இறைமுடிமணி தேடி வந்து விட்டுப் போனது பற்றி அவரிடம் தெரிவித்தான்.
அவன் தெரிவித்ததற்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ அப்போது ஒரு பதிலும் சொல்லாமல் கவனிக்காதது போல் இருந்தார் சர்மா. முகக்குறிப்பிலிருந்து அப்போது அவர் மிகவும் கலக்கமாகவும் மனம் குழம்பியும் இருப்பது போல் காணப்பட்டது.
"அவரோட இயக்க வழக்கப்படி ஐயா படம் மாட்டி ராகு காலத்திலே தான் கடை ஆரம்பிக்கிறாராம். அதை நெனச்சுத் தயங்கிப் பேசாமே இருந்துடாமே சிநேகிதத்தை மதிச்சு நீங்க ஒரு நடை வந்துட்டுப் போகணும்னு சொல்லிவிட்டுப் போனார்.
"....."
"என்னப்பா? என்னமோ மாதிரி இருக்கேள்?...."
"எல்லாத் தகராறும் இதனாலேதான்! போறாக் குறைக்கு நான் அங்கே வேற போய் நின்னேன்னா அது வெறும் வாயை மெல்லற சீமாவையர் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆயிடும்."
"எல்லாத் தகராறும்னா என்ன தகராறு அப்பா?"
"தேசிகாமணிக்கு அந்த வடக்குத்தெரு எடம் கிடைக்க விடாமப் பண்ணணும்கிறதுக்காக.... அவனுக்கு நான் வாக்குக் குடுத்து அடவான்ஸ் வாங்கினப்புறம்... சீமாவையர் அஹமத் அலிபாயைக் கூட்டிண்டு வந்து அவனுக்குத் தான் அந்த எடத்தை விட்டாகணும்னு ஒத்தைக்கால்லே நின்னார். நான் ஒத்துக்கல்லே. குடுத்த வாக்குப்படி தேசிகாமணிக்கு விட்டுட்டேன். மடத்திலேயிருந்தும் நான் செய்தது தான் நியாயம்னு லெட்டர் வந்துடுத்து. சீமாவையரிடமும் அதைக் காமிச்சாச்சு. பார்த்துட்டு ஆகாசத்துக்கும் பூமிக்குமாகக் குதிகுதின்னு