"பிறவியிலேயே இந்துக்களாகிய எங்களுக்கு இருப்பதை விடப் புதிதாக உங்கள் ஊரிலிருந்து வருகிற ஹரே கிருஷ்ணா இயக்கத்தினருக்கு அதிக இந்துமதப் பற்று இருப்பது ஆச்சரியமான விஷயம்."
"சீர்திருத்தம் - மறுமலர்ச்சி என்ற பெயரில் ஒரு புனிதமான பழைய கலாச்சாரத்தின் கங்கைப் பெருக்கிலிருந்து அவசர அவசரமாகக் கரையேறிச் சுளீரென்று வெயில் காய விரும்புகிறீர்கள் நீங்கள், நாங்களோ ஆவலோடு ஓடி வந்து அந்தப் புனிதமான கங்கைப் பெருக்கில் நீராடக் காத்திருக்கிறோம். இந்துவாகப் பிறப்பவன் மட்டுமே முழு இந்துவாக இருப்பதில்லை. எவன் ஒருவன் முழு இந்துவாகக் கனிந்து வாழ்கிறானோ அவனே முழு இந்துவாக இருக்க முடியும். இந்து மதம் என்பது ஒரு மதம் மட்டுமில்லை. மிகவும் பண்பட்ட ஒரு வாழ்க்கை முறை."
"கங்கையில் யார் தேடிப்போய் நீராடுகிறானோ அவனைத்தான் அது நனைக்க முடியும் கமலி!"
"கங்கை என்பது உங்கள் தேசத்தின் வடக்கே ஓடும் ஒரு நதி மட்டுமில்லை. அது இந்தியா முழுவதும் பரவியுள்ள ஒரு பவித்திரத் தன்மையின் பொதுப்பெயர் என்றே நான் நினைக்கிறேன். அதன் வியாபகமே உங்கள் நாட்டில் ஒரு கலாச்சார ஐக்கியமாக இருந்திருக்க வேண்டும். தேசத்தின் பல பகுதிகளில் முதலில் கங்கை நீரைக் கொணர்ந்து ஊற்றித்தான் புதிய ஏரிகள் குளங்கள் வெட்டியதாக உங்கள் வரலாறே சொல்கிறது. இமயமலை முதல் கன்னியாகுமரி வரை எந்த இந்து இறந்தாலும் கடைசியாக ஒரு துளி கங்கைத் தண்ணீரைப் பருகி விட்டு இறப்பது என்பது வேறு உங்களிடையே வழக்கமாயிருக்கிறது."
இதைச் செவிமடுத்ததும் தனக்குச் சொந்தமான ஒரு புனித வரலாற்றை அந்நியர் ஒருவர் உணர்ந்து சொல்லக் கேட்கும் சிலிர்ப்பை வசந்தி அப்போது அடைந்தாள்.
அடுத்த வாரம் அவள் பம்பாய் போகிறவரை கமலியோடு இப்படிப் பல மாலை வேலைகளைச் செலவிட்டாள். மனம் விட்டு அவளோடு உரையாடி மகிழ்ந்தாள்.
அவள் பம்பாய் போன இரண்டாம் வாரமோ மூன்றாம் வாரமோ எதிர்பாராத விதமாய் ஸ்ரீ மடத்திலிருந்து அவசரமாக ஒரு தந்தி வந்து காமாட்சியம்மாளுடன் சர்மா - அங்கே புறப்பட்டுப் போயிருந்தார். அவர் திரும்ப ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று தெரிந்தது. கமலியும்,