தீப்பிழம்புகளில் வாரி இறைக்கவுமாக இடை விடாமல் ஓடியாடி முயன்றும் மேல் காற்றின் காரணமாகத் தீயும் முழு மூச்சுடன் மனிதர்களை எதிர்த்துப் போராடியது. மாட்டுக் கொட்டத் தீயை அணைத்து எரிந்து கொண்டிருந்த போதே விழுந்து விட்ட கனமான கூரையை அகற்றி மாடுகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ரவியும் அக்கம் பக்கத்தாரும் ஆனமட்டும் முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இறுதியில் மாட்டுக் கொட்டத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சி பயனளிக்காமல் வைக்கோற் படைப்புத் தீயோ, மாட்டுத் தொழுவத் தீயோ அக்கம் பக்கத்து வீட்டுக்குப் பரவி விடாமல் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அடுத்தடுத்து எல்லா வீட்டுக் கொல்லைப் புறங்களிலும் வைக்கோற் படைப்புகளும், கூரைச் சார்ப்பு இறக்கிய மாட்டுக் கொட்டகைகளும் இருந்தன. பயத்துக்கு அதுதான் காரணம்.
அதிகாலை ஐந்து மணிக்கு அக்ரகாரத்திலிருந்து போனவர்கள் யாரோ தகவல் சொல்லி இறைமுடிமணி பத்து பன்னிரண்டு ஆட்களுடன் ஓடிவந்தார். தீயை அணைக்கும் முயற்சியில் அவரும் அவரோடு வந்தவர்களும் சேர்ந்து கொண்டனர்.
பலபலவென்று விடிகிற நேரத்துக்குத்தான் தீ கொஞ்சம் அடங்கி கட்டுப்பட்டது. தரையோடு ஒட்டியிருந்த கீழ்ப்பகுதியைத் தவிர வைக்கோற் படைப்புப் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகி விட்டது. காமாட்சியம்மாள் கோபூஜை செய்து வந்த பசுமாடு உள்பட மூன்று மாடுகள் தீயில் சிக்கி இறந்து விட்டன. அதில் ஒன்று சினைமாடு.
அப்பாவும், அம்மாவும் ஊரில் இல்லாத போது இப்படி நடந்து விட்டதில் ரவிக்கு வருத்தம் தான். ஆனால் இது தானாக நேர்ந்ததில்லை. திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு ஒரு சிறிதும் சந்தேகமில்லை. வந்திருந்தவர்களில் வேணு மாமா உள்பட அத்தனை பேரும், "ஏதோ நம்ம போறாத காலம். எந்தத் தெய்வத்துக்கு எது பொறுக்கலையோ" - என்றுதான் சொன்னார்கள்.
இறைமுடிமணி மட்டும், "மனுசன் கொழுப்பெடுத்துப் போயிச் செய்யிற கெடுதல்களுக்கு எங்கேயோ எதையோ உண்டாக்கி ஏன் செய்யாத குத்தத்தை இல்லாதது மேலே போடறிங்க. திராணி இருந்தாத் தீ வச்சது யாருன்னு கண்டு பிடியுங்க. இல்லாட்டித் தலையிலே முட்டாக்குப் போட்டுக் கிட்டுப் போங்க" - என்று கோபமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.