இதற்குள் உள்ளே வந்த டாக்டர், “கொஞ்சம் பேசலாம் என்று சொன்னால் இப்படியா பேசறது” என்றார். ஆனால், ‘பேஷண்ட்’ கொலாப்ஸ் ஆகாமல், குத்துக் கல்லாய் ஆனதில் - அவரை அப்படி ஆக்கியதில் பெருமைப்பட்டார்.
“மல்லி... மல்லிகா” என்று சொல்லிக் கொண்டே பார்வதி உள்ளே ஓடி வந்தாள். இருவரில், யார் முதலில் அணைத்தது என்று தெரியாமல், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்.
“அம்மா... அம்மா...”
“ஏண்டி அழுவுறே... ஏண்டி இப்படி இளைச்சிட்டே. என்னை நினைச்சியா... இனிமேல்... என்னை விட்டுப் போவியா... போவியாடி...?”
“அழாதிங்கம்மா... அழாதிங்கம்மா...!”
மீண்டும், இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்.
பார்வதி, மகளின் தலையை கோதிவிட்டுக் கொண்டே, “டாக்டர், இனிமேல் உங்கள் மருந்து கூட தேவையில்லை. இவர் இப்பவே நடப்பார்” என்றாள். உடனே டாக்டர் “ஆனந்தத்திலேயும் அதிர்ச்சி வரப்படாதும்மா” என்றார். “மருந்து வேண்டாம் என்றால் எப்படி?”
இதற்குள், பெருமாளும், செல்லம்மாவும் பிள்ளை குட்டிகளோடு வந்து நின்றார்கள். பெருமாள், உணர்ச்சி வசப்பட்டு, சொக்கலிங்கத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “எந்த பயலுவளோ... நீங்கள்... சாகணுமுன்னு நான் சொன்னதாய் கோள் சொன்னாங்களாமே. சத்தியமாய் சொல்லுகிறேன்... உங்கள் சொத்துக்கு நான் ஆசைப்படல. அந்தப் பொருந்தாத கல்யாணத்தால... பேச்சியும்... என் தங்கை பார்வதியும் அவஸ்தப்படக் கூடாதுன்னு தான் நோட்டீஸ் அனுப்பினேன். மற்றபடி...”
சொக்கலிங்கம் சிரித்துப் பேசினார்.
“அதெல்லாம் எதுக்குடா பேசுற... ஆமாம்... உன்னை குடிக்கக் கூடாது... குதிரைகிட்ட போகக்