மனிதர்களைக் கூட்டிவிட்டு, அது மீண்டும் புறப்படும் என்று நினைத்தான். அவன் பாட்டுக்கு உட்கார்ந்து கொண்டான். எப்படியோ அந்தப் பெட்டியின் வெறுமை புரிந்து, கீழே இறங்கினான். டிராலி வண்டிச் சத்தங்கள். பிரிந்தவர் கூடிப் பேசிய பேச்சுக்கள். ஆயிரம் தலைகொண்ட அதிசயப் பிறவி ஒன்று நகர்வது போன்ற மனிதக்கூட்டம். ‘க்யா காலே... ஏமண்டி. எந்தா...யா...’ போன்ற வார்த்தைகள் அத்தனைக்கும் பொதுவான இன்னொரு வார்த்தை... ‘அச்சா’
சுயம்பு, தனக்கு ரயிலில் கிடைத்த மரியாதையின் காரண காரியங்கள் புரியாமல், தன் பாட்டுக்கு நடந்தான். முன்னால் ஒரு சத்தம் ‘மனுஷன் போவானா... ஊருக்கு... என்ன தருவோம்னுதான் பாக்காங்களே தவிர, என்ன வேணும்னு கேட்கலை. நீங்க ஒண்ணு. அது ஒங்களோட பார்வை. எனக்கு இந்த ரயிலிலேயே இங்கயே நின்னு திரும்ப ஊருக்குப் போகலாம்னு ஒரு ஆசை வருது.’
சுயம்பு, அந்த ரயிலை தேவதூதுவனாகவும், அசுர உருவாகவும் அனுமானித்த அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும், இணையாக நடந்து இரும்புப்படிகளை ஏறி, அவர்கள் பக்கமாகவே நடந்தான். மூன்று நாட்களுக்குப் பிறகு முதல் தடவையாய்த் தமிழைக் கேட்டது மகிழ்ச்சியாக இல்லையென்றாலும், துக்கச் சுமையைக் குறைத்தது. அவர்கள் மெளனமாக நடந்தபோதெல்லாம், இவன் பேசுங்கள், பேசுங்கள் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். ஆகாயப் பாலத்தில் அவர்கள் பக்கமே நடந்து, அவர்கள் பக்கமே இறங்கினான். இதற்குள் அவர்கள் கையிலுள்ள சூட்கேஸ்களையும். ஒரு சின்ன சுமையையும் பறிக்கப்போன ஆட்டோ புரோக்கர்களை தமிழில் திட்டிவிட்டு, “ஆபீஸ் கார் ஆயகா... ஆபீஸ் கார் வரும்” என்று ஒரு பொய்யை ஆசையாகச் சொல்லிவிட்டு, ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தார்கள். சுற்றிலும் தமிழ் இல்லா ஓசை. ஒன்றும் புரியாத அச்சாக்கள்... அந்த அந்நியக் கூட்டத்தில் சுயம்புவிற்கு அந்தத் தம்பதியர் தன்னைப் பெற்றவர்கள் போலவே தோன்றியது. பிறர் பேசும் முன்பு பேசிப் பழக்கப் படாதவன், அவர்கள் முன்னால் போய் நின்றான். ஏதோ ஒரு தமிழ்ப் பாசம்... தனித்துப் போய்விடவில்லை என்ற ஆறுதல் அவர்களிடம் முகம் கூப்பிக் கேட்டான்.
“சார் நீங்க தமிழா...”
“ஆமா... அதுக்கென்னயா இப்போ...”