Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 29 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 29
சுயம்புவின் கால்கள், அவனைச் சுமந்தபடியே கரோல்பாக் பகுதிக்கு வந்தன. சரிவுச் சாலையில் அவனைச் சாய்த்திழுத்த கால்கள், ஒரு ரவுண்டானாப் பக்கம் நிற்க வைத்தன. சுற்றுமுற்றும் சுத்தமற்ற தமிழ்ப் பேச்சுக்கள். சுற்றமற்ற குரல்கள். அவன் கால்கள் தரையைத் தேய்த்துத் தேய்த்து, அவனை நகர்த்தின. இப்படியே நடந்தால் எறும்பு ஊர, இரும்பும் தேயும் என்பதுபோல், நிற்கக்கூட பூமியில் இடம் கிடைக்காது என்பது மாதிரியான தேய்ப்பு நடை... அவன், அஜ்மல்கான் சாலையை நெருங்கினான். தரையில் குவியல் குவியலாய் இருபக்கமும் கிடந்த தட்டு முட்டுச் சாமான்கள். விளையாட்டுக் கருவிகள். காய்கறிகள். இனிப்புப் பண்டங்கள். சுவர்களில் பிரிந்தாடும் புடவை விரிப்புகள். இடையிடையே நடக்கும் பாட்டுக்கள். இவற்றில் எதையும் அவன் கண்கள் எதிர்கொள்ள மறுத்தன. பிரபஞ்ச சங்கமத்தில், அனைத்தையும் சுற்றவைக்கும் பெளதிக விதி ஒன்றிற்கு மட்டுமே உட்பட்டவன்போல் நடந்தான். அந்தச் சாலையைத் தாண்டி. ராமானுஜம் மெஸ்ஸைக் கடந்து, அதற்குமேல் அதிகச் சந்தடியில்லாத அந்தச் சாலையில் சுயம்பு சித்தன் போக்கு சிவன் போக்காய் நடந்தபோது -
“ஹேய்... இதர் ஆவ்...”
சுயம்பு நின்றபடியே திரும்பினான்.
ஒரு வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட கூட்டுக்குரல். பச்சையம்மா. குருவக்கா மாதிரியான தோரணைகள். அதே சமயம் வாளிப்பான முகங்கள்.
அவன் தனது உண்மையான சொந்தங்களைக் கண்டதுபோல், ஓடிப்போய் - அந்த முள் மலர்களுக்கு மத்தியில், மகரந்தத் தண்டாய் நின்றான்.
அந்த வீட்டிற்குள் ஆடல் பாடலாய்க் குதித்தவர்கள் எல்லாரும் வெளியே ஓடிவந்து அவனைச் சுற்றி வட்டமாய்ச் சூழ்ந்து கொண்டார்கள். மொத்தம் ஐந்து பேர். ஒன்று அசல் காளி மாதிரியான தோற்றம்... வஞ்சகம் இல்லாமல் வளர்ந்த உடம்பு... மங்கலான வெள்ளை... கழுத்தோடு சேர்த்து தொங்கப் போடப்பட்ட டோலக். இன்னொன்றின் கையில் புல்புல்தாரா... சதுரமான படிமப் பெட்டியின் பட்டன்களை அழுத்தி அழுத்தி, அதன் மூலம் மெல்லிய