Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 30 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 30
சுயம்பு, தன்பிறப்பைத் தானே கண்டவன்போல் - இந்தப் பிறவியிலேயே நிர்வாணம் பெற்றவன்போல் தெளிவடைந்தான்.
இந்த ஒரு மாத காலத்தில் அவர்களின் பெயர்களைச் சொல்லுமளவிற்கும் ஓட்டை உடைசல் இந்தியில் பேசும் அளவிற்கும் முன்னேறி விட்டான். நீலிமா... நசிமா... மாக்கிரெட். லட்சுமி... பகுச்சார்தேவி... குஞ்சம்மா...
அது, சுமாரான அறை. நான்கு கட்டில்கள். கயிற்றுக் கட்டில்கள். ஆனாலும் அவற்றுக்கு மேலே மெத்தை. குளிர் காலத்தில் மூடிக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் ரசாய் மெத்தை. இதுவரை ஒண்டிக்கட்டிலில் குடித்தனம் செய்த சுயம்புவுக்கும், ஒரு சொந்தக் கட்டில் கிடைத்தது.
ஒல்லிக்காரியான மலையாளத்தா குஞ்சம்மா எப்போதோ பிசைந்து வைத்த சப்பாத்தி மாவை இப்போது சலவைக்கல் மாதிரியான வட்டக்கல்லில் உருட்டிக் கொண்டிருந்தாள். அடுப்பில் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டப்பட்ட உருளைக் கிழங்குகளை தமிழ்காரி லட்சுமி பொரித்துக் கொண்டிருந்தாள். வேக வைக்காமலேயே அப்படியே பொறிக்கப்படும் அவசர சப்ஜி, இன்று குஞ்சம்மாவின் சமையல் முறை. அவளுக்கு அவசர சப்ஜி செய்யத் தெரியாது என்ற அனுமானத்தில், லட்சுமி ஒத்தாசை செய்தாள். பாடகி நீலிமா, தனது பற்களை மாதிரி நீளநீளமான செண்பகப் பூக்களைத் தடவியபடியே டோலக்கைத் துடைத்துவிட்டாள். நலிமா சுற்றிலும் கடல்சிப்பிகளால் பிரேமாக்கப்பட்ட முட்டை வடிவக் கண்ணாடியின் முன்னால் முந்தானையை இழுத்துப்போட்டு ஒய்யாரமாக எழுந்தாள். இவள்தான், அங்கு அழகு மயம். இதற்குள் மார்க்கரெட், நஸிமாவிடம் ஒரு ஒயர் சுருளை நீட்டினாள். நளிமா அதை விசாலப்படுத்தினாள். இரண்டு ஒயர்க் கம்பிகள். அவற்றில், பல்லி முட்டை மாதிரி சின்னச் சின்ன பல்புகள். பல்வேறு வகை வண்ணக் கலப்புக்கள்... நலிமா, ஒன்றை வட்டமாக்கி, கழுத்தைச் சுற்றியும், இன்னொன்றையும் அதே மாதிரி வட்டமாக்கி உச்சந்தலையைச் சுற்றி வில்போல வளைத்துக் கொண்டாள். மார்பகப் பள்ளத்தாக்கில் இரண்டு சாதா பேட்டரிகளைக் கொண்ட ஒரு சதுரப் பெட்டியைத் தொங்கப் போட்டு ஒரு வளைவை நிமிர்த்திவிட்டாள். உடனடியாக அவள் முகம் பிரகாசித்தது. நீலமாய், மஞ்சளாய், சிவப்பாய், பச்சையாய். தலைக்குமேல் மேலும் கீழும் பல்புகள் பளபளத்தன. தலைக்குமேல் வானவில் ஒளிவட்டம்.