இவையும் போதாது என்று முகத்தில் ஆங்காங்கே ஜிகினாச் சரிகைகளை ஒட்டிக்கொண்டாள். எற்கெனவே இதைப்போல் சிங்காரித்துக் கொண்ட மார்க்கரெட்டோடு, நசிமா ‘சதையாக’ நின்று கொண்டாள். நீலிமா, எந்த மேக்கப் போட்டாலும், தேறாத கேஸ். அவளுக்குத் தெரியும். ஆகையால் சாதாரணமாகவே இருந்தாள். டோலக்கை, மட்டும் கண்ணைச் சிமிட்டித் தட்டினாள். வேறு அறையிலிருந்து வந்த பகுச்சார் தேவியும், ஜிலுஜிலு கொலுசுக் கால்களைத் தரையில் தட்டி, கை வளையல்களைக் குலுக்கிவிட்டு, டோலக் சத்தத்திற்கு சுருதி சேர்த்தாள்.
சுயம்புவிற்கு, அவர்களைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. நலிமா அவனுக்கு ‘ஆட்டக்கலையைச்’ சொல்லிக் கொடுத்து விட்டாள். இரண்டு மூன்று இந்திப் படங்களுக்கும் கூட்டிப் போய்விட்டாள். ஆனாலும் இன்னும் ‘ஸ்டெப்’ சரியாக வரவில்லை. அப்படியும் ஆடப்போனால், அங்கேயும், குஞ்சம்மா லட்சுமி யுத்தம்! இப்படித்தான் ஆட வேண்டும், அப்படித்தான் ஆட வேண்டும் என்று ஆளுக்கு ஒருத்தியாக அமர்க்களப் படுத்துகிறார்கள். சுயம்பு தனக்குக் கொண்டை வந்துவிட்ட அனுமானத்தில் பெரிய மனுஷித்தனமாய், லட்சுமியின் சேலையை எடுக்கப் போனான். நீலிமா, டோலக்கைத் தட்டி அவனைத் திரும்ப வைத்து, திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். அவன் முழு மனுஷியாய் மாறுமுன்னால், புடவையைத் தொடப்படாது. இப்போது இருக்கிற இதே பாவாடை தாவணியிலேயே இருக்க வேண்டும்.
சப்பாத்தியை, அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் வாசலுக்கு வெளியே வந்தார்கள். சேட்டு வீட்டுக் கல்யாணம். இவர்கள் ஆட வேண்டும். பாட வேண்டும். அட்வான்ஸும் வாங்கிவிட்டார்கள். புல்புல் தாராக்காரியும், அங்கே வநதுவிட்டாள். ‘பாவாடை தாவணி’ சுயம்பு, இப்போது சல்வார் கமீஸ் போட்டிருந்தான். ஆடமாட்டான். ஆனால் ஆட்டப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டான்.
மாலை உருக்குலையும் நேரம்...
அந்த ‘கல்லியில்’ தெற்கு வரிசையிலும் மேற்கு வரிசையிலும் ஹஜ்ராக்களின் - அதுதான் அலிகளின் ஆதிக்கம். மற்ற குடியிருப்புகள் சாதாரண மனிதர்களின் சகவாசக் கூடுகள். இதனால், குழப்பம் ஏற்பட்டு, அங்கே வந்தவர்களில் சிலர் அடி வாங்கிக் கொண்டும் போயிருக்கிறார்கள். இப்போது இவர்களின் பகுதி, சராசரிகளைவிட அதிகமாய் ஜில்லடித்தது.