“நீ அல்லே ரெண்டு மக்களே... தத்து எடுத்தது...”
“ரெண்டு முண்டைகளும் மெட்ராசு குப்பத்துக்கு பழையபடி ஓடிட்டாள்களே.”
“நீ தொட்டது ஏதும் சரியாவ்லியா... நண்ட முகராசி அவ்வன என்ன... ஞான்... இவ்ளே... தத்தெடுக்கண.”
இதற்குள் தலைப்பாட்டுக்காரியான நீலிமா, டோலக்கை ஒரு தட்டுத் தட்டி, ஒருத்தி கையை எடுத்து இன்னொருத்தி வாயிலும் இன்னொருத்தி கையை எடுத்து அடுத்தவள் வாயிலும் வைத்து அடைத்தாள். சுயம்பு குழம்பிப் போய் நின்றான். அவனுக்கு எவளுக்கும் மகளாக ஆசையில்லை. பட்டது போதும்...
அடுத்த எட்டு பேரும், ஒரு சந்தைத் தாண்டி, திறந்த வெளி மைதானத்தைக் கடந்து மூன்று மாடிக் கட்டிடக் குவியல்களை நோக்கிப் போனார்கள். சின்னச் சின்ன அறைகள்தான். அரசாங்கக் குடியிருப்புகள். அன்னை இந்திரா, இந்தப் பிறவிகளுக்கும், அங்கே இடம் ஒதுக்கியிருந்தார். அவருக்கு, இவர்களிடம் இருந்த அன்பைப் போல், இன்னும் ஈரம் உலராத சுவர்கள்.
அந்த மாடிக் கட்டிடங்களுக்கு ஒரு ஓரமாக தனித்திருந்த ஒரு சின்ன வீடு. அந்த வீட்டுக்கு வெளியே ஒரு ஆலமரம். அதைச் சுற்றி ஒரு வட்டச் சுவர். அதன் அடிவாரத்திலும் கோழியாசனம் கொண்ட முர்கேமாதா. ஒரு டப்பா நிறைய விபூதி, இன்னொன்றில் குங்குமம்.
அந்த ஆலமரத்தடியில் இருந்தவளை, இவர்கள் எல்லோரும் பயபக்தியோடு பார்த்தார்கள். அவர்களின் குரு அலி கங்காதேவி... ஐம்பது வயதிருக்கும். பின்பக்க முடி மூன்று சடைகளாகத் தொங்கின. அரிசிப் பற்கள். ஊசியை வைத்து அங்குமிங்குமாய்க் குத்தியது மாதிரியான முகம். பவுன் மாதிரிமான நிறம்.
பாடகி நீலிமா, சுயம்பு கிடைத்த விவரத்தை விளக்கினாள். அந்த இருவரும் சொல்லாதே என்று அவளை ஜாடைமாடையாக இடித்தாலும், அவள் இவர்களுக்குள் நடந்து கொண்டே நடந்த ‘சுவீகார’ விவகாரத்தையும் விளக்கினாள்.