தொட்டில் பிள்ளையைப் பார்த்து ‘அழகு’ காட்டினார்கள். இதற்குள் அவன், அவர்கள் எல்லாப் பணத்தையும் பார்த்து விடக் கூடாதே என்பதற்காக, வேறு புறமாய்த் திரும்பி பெல்ட்டுக்குக் கீழே ஜிப்பைத் திறந்து, ஒரு கத்தை நோட்டை உருவி, அதில் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து, பாடகியிடம் கொடுத்தான். அவள் உதட்டைப் பிதுக்கி, எல்லோரிடமும் அந்த நோட்டை நீட்டி இளக்காரமாய்ச் சிரித்தாள். அதைப் பறித்துக்கொண்டே ஒரு அழகு முகம் பொய்க்கோபம் போட்டுப் பேசினாள். “தும் துமாரே பகலே பச்சே கேலியே கித்னா ரூபே தேதே கோ... க்யா துமாரா கந்தான் கா கீமத் யஹி ஹை...” மொதல் குழந்தை பெறந்திருக்கு... இவ்வளவுதான் கொடுக்கே. இதுதான் அதோட விலையா?
அதோடு, அவள் விடவில்லை. பொய்க்கோபம் போட்டு, அந்த ரூபாயைக் கைமுகப்பில் பிடித்து, அவன் ஜிப் பைக்குள் திணித்து, ஒரு தட்டுத் தட்டினாள். அவன் ‘ஏ... ஏ’ என்று நெளிந்தபோது, இன்னொன்று அவன் சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பணத்தைத் தேடுகிற சாக்கில் அவன் மார்பை வருடிவிட்டது.
அவன், ‘சீச்சி’ என்று அங்கேயும் இங்கேயுமாய் நெளிந்து முகத்தை, வேண்டுமென்றே நாணிக் கோணி வைத்திருந்தவளின் தோளில் தற்செயலாய்த் தலையைப் போட்டான். ஒருத்தி அவன் கழுத்தை வருடிவிட்டபோது, நிசப் பெண்டாட்டியான பிள்ளைக்காரி ‘என்ன இது. சொகமா இருக்குதோ’ என்று எரிந்தாள். இதற்குள், இரண்டுபேர் அவன் இரண்டு பைக்குள்ளும் கையை விட்டார்கள். ஒரு கை, கைக்குட்டையோடும், இன்னொரு கை ஒரு பெண்ணின் புகைப்படத்தோடும் வெளிப்பட்டன. வீட்டுக்காரி அழுகைக் குரலில் கத்தினாள்.
“என்னை என் வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க. அப்பவே ஊர்ல் ஒங்களப்பத்தி ஒரு மாதிரிச் சொன்னாங்க...”
“நான் ‘ஒருமாதிரி’ புருஷன் இல்ல. ஒரு ‘மாதிரி’ புருஷன். இந்த போட்டோ ஒரு ‘டாலண்டோட’ படம். நல்லா பாரு... அசல் கிழவி. அறுவது வயசு, என்ன சுலோச்சனா, இவளுக முன்ன வச்ச...”
சுலோச்சனா, அந்தப் படத்தை உற்றுப் பார்த்தாள். குமரி மாதிரி மேக்கப் செய்த கிழவிதான். இதற்குள், தொட்டிலுக்குள் கையை விட்டு இரண்டுபேர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியேறினார்கள். அதைப் பார்த்த சுயம்புவுக்கு அண்ணன் குழந்தையை அதே பிராயத்தில்