பெற்றாளே பிள்ளை செப்டம்பரில்...
வந்ததே பிள்ளைக்கு நாலு மாசம்...
வளருதே இவள் வயிற்றில் ஒரு மாசம்
போவாளோ மாட்டாளோ அம்மா வீடு.
‘போக்கிரி’ அம்மாவுக்கும் மூணுமாசம்.”
அவன் கிட்டத்தட்ட ராகம் போட்டே பாடினான். அந்த ஐவரும் லேசாய் உடம்பைக் குலுக்கி, லயித்துப் போனார்கள். பிள்ளைக்காரி கணவனைக் கண்குத்திப் பார்த்தாள். கிராமத்து மஞ்சளை, டில்லி பவுடர் இன்னும் துரத்தவில்லை. வாயில் புடவைக்குள் ஒரு வடிவழகு... அவனிடம் செல்லமும் சிணுங்கலுமாய்க் கேட்டாள்.
“அடிப்பாவிங்க... இந்த மாதிரி பாட்டா பாடுறாள்கள். நல்லவேளை எனக்கு இன்னும் இந்தி வரலப்பா! எனக்கு ஒரு மாசம்னு எப்படிக் கண்டாளுங்க! எல்லாம் ஒங்களால!”
“ஒங்க அப்பாவாவது சும்மா இருந்திருக்கலாமே...”
“ஏனுங்க... எங்கம்மா உண்டாயிருக்கதும் இதுகளுக்கு எப்படித் தெரியும்?”
“எப்படியோ தெரிஞ்சுக்கிடுறாங்க... தூக்கணாங் குருவிக்கூடு மாதிரி ஒரு ஆச்சரியமான விஷயம்.”
“சரி... சரி... அவங்கள போகச் சொல்லுங்க! தலைக்கு ஐம்பது பைசா வீதம் இரண்டரை ரூபா கொடுத்துடுங்க. ஒரே கூத்து. தரை தேஞ்சிடும்.”
அந்த ஐவரும், தம்பதியர் பேசுவதையே உன்னிப்பாய்க் கேட்டார்கள். எதுவும் புரியாததால்,