பார்த்த நினைப்பு; வெளியே போய் அந்தக் குழந்தையை வைத்திருந்த ஒல்லிக்காரியடமிருந்து, அதை வாங்கிக்கொண்டான். உள்ளே, தாய்க்காரியிடம் கொடுக்கப் போனான். உடனே அந்த இருவரும் தொழில் ரகசியம் தெரியாதவனைக் காதைப் பிடித்து செல்லமாக முறுக்கிவிட்டு, குழந்தையைப் பலவந்தமாக வாங்கிக் கொண்டார்கள். சுலோச்சனா, வாசலுக்கு வந்து கத்தினாள்.
“அய்யோ... என் குழந்தை. ஏங்க, ஒங்களைத்தான். எவ்வளவு பணம் கொடுத்தாவது குழந்தையை வாங்குங்க! இவ்வளவு சம்பளம் வாங்கிட்டு. அஞ்சு ரூபா கொடுத்தால் எப்படி? அந்த ராட்சசி என்ன சொல்றாள்?”
“ஒனக்கு மொதல் தடவையா குழந்தை பிறந்திருக்காம்.”
“ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாதது மாதிரிச் சொல்றீங்க.”
“அவள் சொல்றதச் சொல்றேன். நான் வெறும் மீடியம்தான்.”
“நான் பெத்தா இவளுக்கு என்னவாம்... சரி. சொல்லுங்க... ஒங்க மகன் அவளைப் பார்த்துச் சிரிக்கான் பாருங்க... அப்பன் புத்திதான் அவனுக்கும் இருக்கும். இன்னும் என்னமோ சொல்றாள். என்னவாம்...”
“அதுவும் ஆண் குழந்தையாம்... நூறு ரூபாய்க்குக் குறையாமல் கொடுக்கணுமாம்.”
“அய்யோ... குழந்தையைத் தூக்கிட்டுப் போறாள் பாருங்க! அடுத்த குழந்தைக்குக் கவனிக்கிறதாச் சொல்லி ஒரு ஐம்பது ரூபா கொடுங்க. சரியான கஞ்சன் நீங்க!”
அவன், ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு அந்த ஒல்லிக்காரியின் பக்கம் போனான். அதைக் கொடுத்துவிட்டு குழந்தையைக் கேட்டான். உடனே கிடைத்தது. வீட்டுக்குள் வந்து, சுலோச்சனாவிடம் குழந்தையைக் கொடுத்தபோது, சுலோச்சனா அவர்களைப் பார்த்துத் தமிழில் வெளுத்து வாங்கினாள். “தடிச்சிங்களா... தட்டுக்கெட்டதுகளா... எச்சிக்கலை எறப்பாளிகளா... என் குழந்தைய இனிமே தொடுங்க பார்க்கலாம்...” உடனே அவள் கோபத்தைப் புரிந்து கொண்ட டோலக்காரி, படபடப்பாய் இந்தியில் பொரிந்து தள்ளினாள். அதைக் கணவன் மனைவிக்கு