Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 32 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 32
மறுநாள் காலையில், எல்லோருக்கும் முன்னாலேயே குளித்துவிட்டு, ஆலமரத்தடி கங்காதேவியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு, வீட்டுக்கு ஓடிவரப் போனான் சுயம்பு. இன்றைய சமையல் அவன் முறை. அப்போது ஒரு மாருதி ஜீப் குறுக்கே நின்றது. அதன் முன்பக்கம் இருந்து குதித்தவன், ‘இஎன்ஜி’ காமிராவை சரிபார்த்துக் கொண்டிருந்தான். பேச்சையும் பேசிய உருவத்தையும் ஒரே சமயம் பதிவு செய்யும் காமிரா. அந்தக் குழுவின் தலைவரைப்போல் தோன்றிய சுலோச்சனாவின் கணவன் சுயம்புவை அடையாளம் கண்டுகொண்டான்.
“நல்லவேளையா இன்னிக்கு ஒரு சங்க் காலியா இருக்குது... டூர் இழுத்துட்டதால, ரிக்கார்ட் செய்ய முடியாமப் போச்சு! ஒங்க ஆட்கள் டான்ஸ் செய்யணும். ஒங்க தலைவர் பேட்டி கொடுக்கணும்.”
“மொதல்ல என் மருமகப்பிள்ளை எப்படி இருக்கான் - அதைச் சொல்லுங்க.”
“தேங்க்யூ தெளிவா இருக்கான். அப்புறம் நீயும் பேட்டி கொடுக்கணும்.”
“வேண்டாம்... எங்கப்பா பார்த்தா துடிச்சுடுவார்.”
“இந்த நெட் ஒர்க் இந்தி ஏரியாவுக்குள்ளதான். நேஷனல் நெட் ஒர்க் இனிமேதான் வரணும். அது வரைக்கும் இங்க போடறது அங்க தெரியாது. சரிப்பா குயிக்...”
“இப்படி திடுதிப்பென்னு வந்து நிக்கீங்களே! எங்க ஆட்கள இனிமேல்தான் தேடிப் பிடிக்கணும்.”
“நீ வேற... உள்ள போய்ப்பார்!”
சுயம்பு தன் அறைக்குள் ஒடிப் பார்த்தான். ஒவ்வொன்றும் தன்னை, இந்திக் கதாநாயகியாக நினைத்துக்கொண்டு போஸ் முகங்களோடு போக்குக் காட்டின. சுயம்புவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தன. அவசரப் பவுடர்கள். ஈரம் காயாத முகங்களில் பட்டு, வெள்ளைத் திட்டுக்களாய் விகாரமெடுத்து நின்றதும் உண்மைதான்.