(Reading time: 15 - 30 minutes)
Vata malli
Vata malli

Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 33 - சு. சமுத்திரம்

வாடா மல்லி, அத்தியாயம் - 33

  

சுயம்புவை பெளர்ணமிப்பதற்கான சித்ரா பெளர்ணமி...

  

அந்த அறையில் ஒரு சுவரில் சுயம்பு சாத்தி வைக்கப்பட்டான். உடல் அளவில் நிர்வாணப்பட்டு, நிர்க்கதியாய் நின்றான். நின்றானில்லை. நிறுத்தி வைக்கப்பட்டான். பிறந்தமேனிக் கோலம் போட்டவன், எதிரே கண்ணில் பட்டதைப் பார்த்துக் கதறப்போனான். ஆனால் அவனது நீண்டு வளர்ந்த தலைமுடியே அவன் வாயில் திணிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த முடிக் கற்றைகள் வழியாகத்தான் அவன் அரைகுறைப் பார்வை போட வேண்டியிருந்தது. அந்தப் பார்வையில்கூட அந்த அரிவாள் மின்னியது. ஒரு முழு நீளமுள்ள வெட்டரிவாள். பார்த்தால் முகம் தெரியும். தொட்டால் ரத்தம் வரும். அதைப் பிடித்துக் கொண்டு நின்ற அலியும், அசல் தாடகை மாதிரி கோர சொரூபம். சுயம்பு அனிச்சையால் துள்ளப் போனான். அவனைப் பிடித்தவர்கள் அங்குமிங்குமாய் இறுக்குகிறார்கள். முடியின் பிடி வலுத்தது. அவன், அப்படியும் கத்தப் போனபோது, வாயிலிருந்த தலைமுடி கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. உள்நாக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

  

சுயம்பு அங்குமிங்குமாய்ப் புரளப் போனான். இரண்டு அலிகள் இருபக்கமும் அவன் கைகளை இழுத்துப் பிடித்திருந்தனர். இடுப்புக்குக் கீழே ‘அதில்’ ஒரு கருப்புக் கயிறு முடிச்சாகி, இரு பக்கமும் நீண்டிருந்தது. முகமறியா இரண்டு அலிகள் அந்தக் கயிற்றின் இருமுனைகளையும் இழுத்துப் பிடிப்பதற்காக, தங்கள் உடம்புகளையும் முறுக்கோடு நிறுத்தி வைத்தார்கள். அந்தக் கயிற்றின் ஆதாரத்திலேயே அவர்கள் நிற்பது போலிருந்தது. சுயம்புவின் பாதங்களுக்குச் சிறிது பின்புறமாய், விபூதி குங்குமம் வைக்கப்பட்ட ஒரு புது மண்பானை. விழுவதை விழுங்குவதற்கு வாய் பிளந்து காத்திருந்தது.

  

அந்த அறையின் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. உள்ளேயும் ஒரு வட்டமான சித்ரா பெளர்ணமி மின் விளக்கு... எதிர்ச்சுவர்ப் பக்கம் முர்கேவாலி மாதா, சேவல் மேல் சரிந்து நின்றாள். இவனையே பார்க்கும் உக்ரப் பார்வை. இவனுக்குக் குறி வைத்தது போன்ற திரிசூலம். பழவகைப் படைப்புக்கள். ஊதுபத்திகள், மேகமண்டலத்தை உற்பத்தி செய்தன. எல்லோரும், சுவர்க்கடிகாரத்தையே பார்த்தார்கள். அது நள்ளிரவு பன்னிரண்டு மணியைக் காட்டி அடிப்பதற்கு, இன்னும் நூறு தடவை சொடக்குப்போட்டு விடலாம்.

  

சுயம்புவால் விம்மத்தான் முடிந்தது. மனம் விட்டுத் தேம்பி, வாய்விட்டு அழ முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.