படைச்சாங்க. ஒவ்வொரு குரு அலியும் இன்னொரு குரு அலிகிட்ட என்ன அடிமையா வித்தாங்க. அடி அடின்னு அடிச்சாங்க. போலீஸ் அடிச்சு, ‘பிள்ளை திருடி’ன்னு பொதுமக்கள் அடிச்சு, கை ஒடிஞ்சுது... கால் ஒடிஞ்சுது... இது பொறுக்காமல், என்னை நானே அடிச்சு தலை கிழிஞ்சுது... ஆனாலும் பொறுத்துக்கிட்டேன். கடைசியில ஜமீன்தார் - அப்பன், அவன் கண்ணுல நான் முழிக்கக்கூடாது என்கிற கண்டிஷன்ல பத்து ஏக்கர் நிலத்தை எழுதி வச்சான்... வேற பக்கம் வீடு தாரேன்னான்... நான் இங்கயே கட்டிக்கிட்டேன். அது என்னமோ தெரியல... ஒன்னை மாதிரி எல்லா அனாதைகளும் இந்தப் பக்கம் தான் வாராங்க... இந்திரா காந்தி மற்றவங்களுக்கு எப்படியோ.. நமக்கு அந்தப் புண்ணியவதிதான் குடியிருப்பில் இடம் கொடுத்தாள். போலீஸ் கையக் கட்டிப் போட்டாள்.
“என் செல்வமே! இன்னும் பல இடங்களில், குரு அலிகளோட கொட்டம், இன்னும் அடங்கல! சேலா அலிகளை விற்கிற காலம் போகல்ல. அவங்க உழைச்சுக் கொண்டு வாற காசுல இந்த குரு அலிங்க வயிறு நிரப்புறாங்க. இது போதாதுன்னு, சில சமுக விரோதிகள் அப்பாவிப் பையன்களைக் கூட பலவந்தமா கொண்டு வந்து அறுத்துப்போட்டு நம்மளமாதிரி ஆக்கிடுறாங்க. அஜ்மீரி கேட் - சிவப்பு விளக்கு மாதிரி, கள்ளச்சாராயம் காய்ச்சுவது மாதிரி இந்த ஆயாராம் - காயாராம் அரசியல் மாதிரி, அப்பாவிப் பிள்ளைகளை அலிகளாகக் காயடிக்கிற காலமும் உருவாகி செயற்கை அலிகளும் உற்பத்தி செய்யப்படுறாங்க! இதை என்னளவில் எதிர்த்து நிக்கேன். இதற்காகவே போலீஸ் சூழ்ச்சியில, குரு அலிகளோட வஞ்சத்தில், ஜெயிலுக்கும் போயிருக்கேன் மகளே! ஆனாலும், இயற்கை அலிகளைக் காப்பாத்துறதுக்கும் செயற்கை அலிகள் உற்பத்தியைத் தடுக்கிறதுக்கும் போராடி வரேன் மகளே! ஏனோ தெரியலை, நீ எனக்குப் பிறகு அந்தப் பொறுப்ப எடுத்துக்குவேன்னு ஒரு நம்பிக்கை. இதுக்குமேல என்னப் பற்றிப் பேச, கூச்சமா இருக்குதடி. இதுக்குமேல் ஒனக்கு எதுவும் தெரியணுமுன்னா, இந்த லட்சுமி கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ. நல்லதா சொன்னால், சொல்ல வேண்டாம். கெட்டதாய் சொன்னால், சொல்லு. திருத்திக்கிடறேன்.”
சுயம்பு, பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு, விக்கித்து நின்ற குரு அலியைப் பார்த்தான். அந்தப் பெரிய தேகத்திற்குள் அத்தனை அணுக்களும் அண்டசராசரமாய்ச் சுற்றுவது போலிருந்தது. அம்மாவைக் கண்டுகொண்டான். லோகமாதா கிடைத்து விட்டாள். ஊனத்தாய் இல்லையென்றாலும் ஒரு ஞானத்தாய் கிடைத்தது போன்ற உணர்வு. அதற்காக ஆயிரம் உறுப்புக்களையும் ஐயாயிரம் தடவை வெட்டுக்குக் கொடுக்கலாம் என்பது போன்ற வெள்ளப் பிரவாக உணர்வு.