Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 34 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 34
சுயம்புவுக்கான, முப்பெரும் விழாக்களில், மூன்றாவதும், பெரியதுமான பெருவிழா.
அவனுக்கு அறுவை நடத்திய நாற்பதாவது நாளில் அதே இடத்தில் அலி பட்டாபிஷேக விழா நடைபெற்று விட்டது. அதையடுத்து, அவன் பூப்பெய்ததைக் குறிக்கும் விழாவும் நடந்து முடிந்தது. அவனை ஒப்புக்கு, ஒரு சவுக்குக் கம்பியில் உட்கார வைத்துவிட்டு, அவனே, தானாய் எழுந்திருக்கும்படி விட்டுவிட்டார்கள். இன்று நடப்பது முறைப்படியான சுவீகார விழா. குரு அலியான கங்காதேவி, சுயம்புவை, மகளாக தத்து எடுத்து அலி உலகிற்கு பிரகடனப்படுத்தும் விழா! முன்னைய நிகழ்ச்சிகள் இரண்டிலும் முகம் சுழித்துக் கலந்துகொண்ட சுயம்பு, இன்று முழுமனத்தோடு ஈடுபடும் விழா.
அந்த வெட்டைவெளி முழுவதும் ஷாமியானா பந்தலால் போர்த்தப்பட்டது. உள்ளே சர விளக்குகள். தோரண வாயில் மாதிரியான ஜெபமாலை மின் விளக்குச் சரங்கள். பந்தல் தாங்காத கூட்டம். டில்லியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள அத்தனை அலிகளும் அங்கே கூடிவிட்டனர். கங்காதேவியைப் பற்றி, எல்லோருக்கும் நல்ல முறையில் தெரியும் என்பதை எடுத்துக் காட்டும் பெருங்கூட்டம். அவள் அழைப்பின் பேரில், பலர், கல்கத்தா, பம்பாய், சென்னை, போன்ற முக்கிய நகர்களிலிருந்து வந்திருந்தார்கள். அந்தப் பந்தலுக்கு வெளியே ஏழெட்டுக் கார்கள். ஐம்பதுக்கும் அதிகமான ஸ்கூட்டர்கள். பெரும்பாலானவர்கள் வாயில் புடவை கட்டியிருந்தார்கள். கால்வாசிப்பேர் இயற்கைப் பட்டையும் செயற்கைப்பட்டையும் உடுத்தியிருந்தார்கள். இவர்கள் எப்படி அலியாக இருக்க முடியும் என்பது மாதிரியான பெண் அழகுகள். அறுவை செய்யாமல் லுங்கிகளைக் கட்டி, மார்பில் மாராப்பைப்போல் துண்டைப் பரப்பியவர்கள், தீணடத்தகாதவர்களாய் ஓரங்கட்டி நின்றார்கள்.
ஆலமரத்தடி, முர்கேவாலி மாதாவுக்கு தனிக்களை கொட்டியது. ஆத்தாவின் பெரிய புகைப்படத்தைச் சுற்றி கலர் பல்புகள் மின்னி மின்னிக் காட்டின. அம்மாவின் முன்னால் தேங்காய், மாங்காய், திராட்சைப் படைப்புக்கள். ஒரு செம்புப் பால். கற்பூரம் ஜோதியாய் தொடர்ந்து எரிந்தது. அது குறையக் குறைய, யாரோ கற்பூரக் கட்டிகளை எடுத்துப் போட்டவண்ணம் இருந்தார்கள்.