இதற்காகவே மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட அலிகள் கரகாட்டமும் காவடியாட்டமும் நடந்து கொண்டிருக்கின்றன. இதே செட்டு இன்னொரு பிரிவாகி ‘மதுரை மணிக்குறவன்’ செய்த மாபெரும் செயல்களைக் கூத்தாய் முழங்கின. ஒலிபெருக்கியில் இந்திப்படப் பாடல்கள். ஆங்காங்கே அலிகளும், அவர்களோடு வந்த இளைஞர்களும் பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ஒரு கவாலிப் பாடல். எங்கும் ஒளி மயம். ஒலி மயம்.
சுயம்பு முல்லைச் சரங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கங்காதேவியுடன், இணையாக உட்கார்ந் திருந்தான். ஒரு அலி புரோகிதர் ஏதோ மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். சுயம்புவின் உடல்மேல் காஞ்சிபுரம் பட்டுப்புடவை. அவனுக்குப் பிடித்த பச்சை பார்டரும், வெள்ளைச் சரிகையும் கொண்ட வெளிர் மஞ்சள் சேலை. அதே வண்ண ஜாக்கெட் காதுகளில் தங்க வளையங்கள். கழுத்தில் வளைந்து நெளிந்த மூன்று தங்கச் சங்கிலிகள். பெருவிரல் தவிர்த்து, எட்டு விரல்களிலும் எட்டுவகை மோதிரங்கள். தங்கச்செயின் கடிகாரம். சுயம்புவைச் சுற்றி நீலிமா கோஷ்டி... பக்கத்தில் நெருக்கமாக யார் நிற்பது என்பதில் அங்கேயும் குஞ்சம்மா - லட்சுமி யுத்தம். சொந்த வீட்டு நிகழ்ச்சி என்பதால், நீலிமா பாடவில்லை. மார்க்கரெட் ஆடவில்லை. நசிமா சுயம்புவின் அலங்காரத்தைப் பராமரிக்க அவன் கன்னத்தை, பவுடர் மெத்தையால் ஒத்தினாள். வேர்த்த பகுதிகளைத் துடைத்துவிட்டாள். சென்ட் பாட்டிலை அடித்துவிட்டாள். ஜிகினா ஜரிகைகளை ஒட்டிவிட்டாள். அவன் முகம் அவர்களே வகுத்துக் கொண்ட வரையறை வட்டத்திற்குள், நிமிர்த்தியும் கவிழ்த்தியும் வைக்கப்பட்டது. லட்சுமி - குஞ்சம்மா பூனைகளின் சண்டைக்கு நீலிமா குரங்கின் ஒரு நபர் விசாரணைக் கமிஷன்.
மேடைக்கு முன் வரிசையில் போடப்பட்ட மூங்கில் நாற்காலிகளில், முக்கியமான புள்ளிகள். குரு அலிகள். அலிகள் சங்கப் பிரமுகர்கள். கங்கம்மாவின் ஆசீர்வாதத்தால் முன்னேறியிருப்பதாக நினைக்கும் ‘சராசரி’ பணக்கார மனிதர்கள். ஒவ்வொருவர் கரத்திலும் ஏதோ ஒரு பரிசுப் பொருள். பெரும்பாலானவை சேலைகள். சிறுபான்மை மோதிரங்கள்.
அந்த அலி புரோகிதர் கங்காதேவியின் கையைப் பிடித்துக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு கையாட்டிச் சொன்னார். உடனே, கங்காதேவி, சுயம்புவைப் பிடித்துக் கொண்டு சுற்றுமுற்றும் அலிகளும், நட்பு மனிதர்களும் சூழ முர்கேவாலி மாதாவின் ஆலமரத்தடிக்குப் போனார்கள். நசிமா அங்கிருந்த பால் செம்பை பயபக்தியோடு முர்கே மாதாவின் முன்னால் நகர்த்தி