டி.வி. காரர்கள் போன மறுநாளே, அவன் குரு அலி கங்காதேவிக்கு நிச்சயிக்கப்பட்ட மகளாக அவள் வீட்டுக்கே, சுயம்பு வந்துவிட்டான். இல்லை, வரவழைக்கப்பட்டான். மயில் இறகில் செய்தது மாதிரியான கட்டில் படுக்கை. தனித்த அறை. மின்விசிறி. வேளா வேளைக்கு, பிரியாணி முதல் பிரிஞ்சி வரை கொடுக்கப்பட்டது. ஆனாலும், அது ஒரு உயர் ரக சிறைவாசம். அவனுக்குப் பழக்கப்பட்ட எந்த அலியும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கங்காதேவி அவ்வப்போது வருவாள். இவனிடம், தனக்குத் தெரிந்த பல மொழிகளிலும் சில வார்த்தைகளை உருட்டிப் போட்டு ஒருவிதப் புது மொழியில் பேசுவாள். ஆனாலும், அந்தப் பேச்சு செய்யாத காரியத்தை அவரது செல்லமான முதுகுத் தட்டும், கன்ன வருடலும் செய்துவிட்டன. இடையிடையே ‘மகளே. நீ இப்போ இருப்பது மாதிரி, பலர் இருந்தாலும், நீ என்னுடைய மகள் என்பதாலும், எனக்குப் பிறகு ஒருவேளை குரு அலியாக வரலாம் என்பதாலும் இந்தத் தியாகத்தைச் செய்துதான் ஆகவேண்டும்’ என்றாள். சுயம்புவும் ஏதோ அலி சமுதாயத்திற்காக விடுதலைப் போர் தியாகிகள்போல், ஏதாவது ஒன்றைச் செய்வதற்கு தன்னை ஆயத்தப்படுத்துவதாகத்தான் நினைத்தான். அவனுக்கு, உணவு கொண்டுவரும் சேலா அலிகளிடமும், கையால் சைகை செய்து வாயால் ‘க்யா தமாஷா ஹை’ என்றுகூடக் கேட்டுப் பார்த்தான். அவர்கள் அவனது தமிழ்ப்படுத்திய இந்தி வார்த்தையை ரசித்தார்களே தவிர பதிலளிக்கவில்லை. போதாக்குறைக்கு லட்சுமியக்கா, பூடகமாய் சொன்ன சொல்லும், பயமுறுத்தியது.
இன்று காலையில்தான், அவனுக்கு வெறும் தயிர் சாதம் மட்டும் கொடுத்தார்கள். வழக்கமான பிரியாணி குருமா கண்ணில்கூடக் காட்டப்படவில்லை. அதற்குப் பிறகு, முழுப் பட்டினி, குரு அலி, அவ்வப்போது எட்டிப் பார்த்தாள். எதுவுமே பேசவில்லை. அவனைத் தூங்கும்படி தொலைவிலேயே நின்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இரண்டு பேர் அவனை இரவு பத்தே முக்கால் மணி அளவில் எழுப்பி விட்டார்கள். குளிக்கச் சொன்னார்கள். குளித்தான். பட்டினுள் பட்டான ஒரு மின்வெட்டு லுங்கியை கட்டச் சொன்னார்கள். கட்டிக் கொண்டான். சிறிது நேரத்தில், இரண்டு புது அலிகள், அவன் கைகளை சிநேகிதமாகப் பிடித்தார்கள். அவர்கள் கண்காட்டிய இடத்தில், கால் போட்டான். அந்த வீட்டுக்குள்ளேயே அலங்கரிக்கப்பட்ட ஒரு முக்கடி அறை. கங்காதேவி தனது அறை வாசல் வரை வந்து அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். நெற்றியில் தனது கையை வைத்து முர்கே மாதா என்றாள். அவளுக்காக, அவனை நிற்க வைத்தவர்கள், அவளது கண்ணசைவாலேயே உள்ளே கொண்டு போனார்கள். உடனடியாய், கதவு சாத்தப்பட்டது. கசாப்பு அலியின் கையில் இருந்ததைப் பார்த்துவிட்டு, கத்தப்போன சுயம்புவை, அப்படியே மோதிப் பிடித்துக் கோழியைப் பிடிப்பது மாதிரி பிடித்து