வரமுடியும்? நம் மக்கள் முட்டாள்களா? இந்தக் கட்சி பதவிக்கு வருவதற்கு மக்கள் எல்லோரும் இதற்கு முன் இருபது வருஷ ஆட்சியில் தங்களுக்கு அடிப்படைத் தேவைகூடக் கிடைக்கவில்லைன்னு புரிஞ்சிட்டதுதான் காரணம். தென்னாட்டுக் கிராமங்களில் காந்தியைப் பலருக்குத் தெரியாது. ஆனால் அண்ணா என்று சொன்னால் லட்சோப லட்சம் மக்கள் உருகிப் போகிறார்கள். ஒவ்வொரு குடிசையிலும் நான் உங்களில் ஒருவன் என்று கலந்து கொண்டவர் அவர்."
யமுனாவுக்கு 'இப்போது அடிப்படைத் தேவைகள் கிடைக்கின்றனவா?' என்று கேட்க ஆசைதான். அவள் கிடைக்கிறது என்று தான் சொல்வாள். இல்லை என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது.
"அது போகட்டும். அருணா - நீ திருமணம் செய்து கொள்ளலியா?"
"அதைப்பற்றி யோசிக்கவே எனக்குப் பொழுதில்லை. சரியாப் போகுது..."
"யார் கண்டது? அடுத்த தேர்தலுக்குப் பிறகு நீயே மந்திரியாகி விடலாம்!" அருணாவுக்கு இந்தப் புகழுரை பிடித்திருக்கிறது! சிரித்துக் கொள்கிறாள்.
"அறுபத்தேழிலேயே அண்ணா, 'பாப்பாவை நிறுத்தி வச்சா ஓட்டை வாரிட்டு வந்திடும். வயசாகலியேன்னு பார்க்கிறேன்' என்றார். ஆனால் நான் தேர்தலுக்கு நிற்க மாட்டேன்."
"ஏன்?"
"எனக்கு இந்த வாழ்க்கை தான் பிடிச்சிருக்கு. இது கலை. கலைக்காக வாழ்வதுதான் எனக்கு இஷ்டம்..." என்று உதயசூரியன் முகப்பை உதட்டில் வைத்துக் கொள்கிறாள்.
கலை! பிரசாரமும் ஒரு கலையோ? இருக்கலாம். அறுபத்து நான்கு கலைகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.
வாழ்க்கையில் அரசியல் என்றாலும் அதில் ஒரு முகமாகக் குவிய, திட்டவட்டமாக இளவயசில் ஒரு கோட்பாட்டை வரையறுப்பது சுதந்திர சிந்தனைகளைத் தடைச்