தவிர்க்க மற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுக்குத் தானியம் அளிப்பார்கள். இன்று அந்தப் பண்புகள் அழிந்து போய் விட்டன. தேவைகளைப் பெருக்கிக் கொண்டு பேராசையில் மக்கள் திளைப்பது தான் இதற்குக் காரணம். கைராட்டையை விண்வெளிக் கலத்தை விட மேன்மையாக ஏன் கருதுகிறேனென்றால் எல்லோரும் விண்வெளியில் செல்லும் பேராசையில் சோர்ந்து விழுவதை விட எல்லோரும் மானம் காத்துக் கொள்ளத் தம் உடையைத் தாமே தயாரித்துக் கொள்வதனால் பல எளியோரின் பிரச்னைகளைத் தீர்க்கலாமே என்பதனால்தான். குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி நண்பர் கூறினார். அதைப் பற்றிப் பேசுவதற்கோ ஆராய்வதற்கோ இது உரிய இடம் அல்ல. இந்த விஷயம் பற்றிய ஆசிரம வெளியீட்டை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். அடுத்து, இலட்சியங்கள் ஒருநாளும் தோல்வி அடைவதில்லை. காந்தியடிகள் எந்த இலட்சியத்தையும் புதிதாகத் தோற்றுவிக்கவில்லை. அலட்சியமாக நழுவ விட்டதை எடுத்துக் கொடுத்தார். இந்தியச் சமுதாயம் இன்றும் நிலைத்து நிற்கக் காரணமானவையே அந்த இலட்சியங்கள் தாம். நாட்டில் வேறு புதிய புதிய சமயங்களும் கொள்கைகளும் மோத வந்துங்கூட, சத்தியம், அஹிம்சை அன்பு ஆகிய நெறிகளின் அடிப்படையில் உயர்ந்து நிற்கும் ஆன்மிக வாழ்வு என்ற தத்துவத்தில், நோக்கத்தில், எல்லாச் சமயங்களும் ஒன்றே என்று நிலை கண்டதனாலேயே இந்தச் சமுதாயம் இன்னும் புதுமை அழியாமல் நிலைத்து நிற்கிறது..."
ஒலி பெருக்கித் தண்டைப் பற்றிக் கொண்டு அவள் புன்னகை புரிகிறாள். நெற்றி வியர்க்கிறது. இந்துநாத் மலைத்துப் போனாற்போல் உட்கார்ந்திருக்கிறான்.
தொலைவில் ஒரு கறுவல் முகம் உயர்கிறது.
"காந்தி மேலை நாட்டுக் கல்வி முறையை எதிர்த்தார். தம் மக்களுக்கு அக்கல்வியைக் கற்பிக்கவில்லை. ஆனால் முழுசும் மேல் நாட்டுக் காற்றிலேயே வளர்ந்த ஒருவரைத் தமக்குப் பிறகு தன் மொழியைப் பேசுவார் என்று தேர்ந்தது எதனால்?"
"மன்னிக்க வேண்டும் நண்பரே! நான் உயரிய இலட்சியங்களைப் பற்றியே பேச வந்தேனே ஒழிய காந்தி என்ற தனி மனிதரைப் பற்றியே பேச வரவில்லை" என்று அவள் ஒதுங்கப் பார்க்கிறாள்.
"ஹோ, ஹோ" என்ற ஆரவாரங்களும் கேலிகளும் எழுகின்றன.