நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் அந்தத் தலைவரே, தம் கட்சிக்காக இலட்சியத்தைப் பலி கொடுத்து விட்டுக் கட்சியை வலுவாக்க வேறொரு மனிதருக்கு வாக்குக் கொடுத்தார். காந்தி அந்தக் காலத்திலேயே விலைக்கு வாங்கப்பட்டார். அந்த விலை நாட்டின் தலைமைப் பொறுப்பு - அல்லது பதவி!"
யமுனாவுக்குச் செவி மடல்கள் குப்பென்று எரிகின்றன.
இந்த அவதூறுகளை வீசுபவன் சுதீர்தான்.
"அம்மணி, காந்தியம் எந்நாளும் நடைமுறைக்கு ஒத்து வரமுடியாத பிதற்றல் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்!" என்று கறுவல் முகம் எழும்பி உட்கார்ந்து கெக்கலி கொட்டுகிறது.
பஜனை மண்டபத்தில் கூச்சலும், குழப்பமும் உண்டாகும்போது 'நமப் பார்வதி பதயே!' என்று எழுப்புவார்களே, அப்படி சூரியநாராயணர் மேசையைத் தட்டி விட்டு எழுந்திருக்கிறார்.
"ஒரு பேச்சாளரை நாம் பேசக் கூப்பிட்டிருக்கிறோம். ஒரு விஷயம் பேசச் சொல்கிறோம்; பேசுகிறார். கேள்வி கேட்பதே நாகரிகக் குறை. அதிலும் இது... அவசியமில்லைன்னு நினைக்கிறேன்" என்று தொடங்கி நன்றி கூறி கூட்டத்தை முடிக்க வழி செய்கிறார். யமுனா கெட்ட கனவினிடையே விழித்த குழந்தையைப் போல் உட்கார்ந்திருக்கிறாள். நன்றி கூறும் சம்பிரதாயச் சொற்கள் செவிகளில் விழுமுன் கரைந்து போகின்றன.
"பிரமாதமாகப் பேசினே. இதுகள் அசத்துகள். கேள்வி கேட்கறதுக்குன்னே கூட்டத்துக்கு வரும்..." என்று விடை கொடுத்துவிட்டு சூரியநாராயணர் மாலையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு பெரிய காருக்குள் ஏறிச் செல்கிறார். வழியனுப்ப வருவது போல் நான்கு பேர் தொடர்ந்து வருகையில் சுதீர் அவளுக்காக வழியில் நிற்பான் என்று எதிர்பார்க்கிறாள். நெஞ்சு சோர்ந்து விழுகிறது. சிகரெட்டும் கையுமாக இந்துநாத்தான் கதவடியில் நிற்கிறான்.
இப்போது வண்டியின் பின்னால் அவளருகில்தான் உட்காருகிறான். ஆனால் அவள் சிந்தையில் அவன் அருகில் இருப்பதே உறைக்கவில்லை. பெரிய தோல்வி கண்ட ஏமாற்றத்தில் திரும்பத் திரும்ப எதை எதையோ எண்ணிச் சோருகிறாள்.