(Reading time: 3 - 5 minutes)

கருத்துக் கதைகள் – 09. கோள் சொன்னால் கேடு விளையும்... - தங்கமணி சுவாமினாதன்

Lion and Fox

காட்டு ராஜாவாகிய சிங்கத்திற்கு உடல் சரியில்லாமல் போகவே வேட்டையாடச் செல்லாமல் தனது குகையிலேயே படுத்துக் கிடந்தது.

உடல் நிலை சரியில்லாத அதனை காட்டின் பிற மிருகங்களெல்லாம் ஒவ்வொன்றாய் மரியாதை நிமித்தமாக வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றன.

அன்று ஓனாய் ஒன்று சிங்கத்தைக் காண வந்திருந்தது. வெகு நேரம் சிங்கத்தோடு பேசிக் கொண்டிருந்தது. ரொம்பவும் சிங்கத்தின் நலத்தில் அக்கறை இருப்பது போல் நடித்தது.

அக்காட்டில் குள்ள நரி ஒன்றும் இருந்தது. அன்னரியைக் கண்டால் இந்த ஓனாய்க்குப் பிடிக்காது. இரண்டுக்கும் பகைமை.

அன்றுவரை அந்தக் குள்ள நரி சிங்கத்தை வந்து பார்க்கவில்லை என்பது அந்த ஓனாய்க்குத் தெரிந்திருந்தது. எப்படியாவது சிங்கத்திடம் நரியை மாட்டி விட வேண்டும் என நினைத்தது ஓனாய்.

சிங்கண்ணே. . மெதுவாய் ஆரம்பித்தது ஓனாய்.

என்ன. . சொல்லும் ஓனாய் அவர்களே. . .

உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்

சிங்கத்திற்கு பேசவே கஷ்டமாய் இருந்தது.  தலையை மட்டும் சொல்லு என்பது போல் ஆட்டியது.

சிங்கண்ணே. . சிங்கண்ணே. . மறுபடி ஆரம்பித்தது. . ஓனாய். .

சிங்கத்திற்குக் கொஞ்சம் கோவம் வந்தது. சின்னதாய்க் கர்ச்சித்தது. .

இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது என நினைத்த ஓனாய். .

அண்ணே. . . . நீங்கள் இந்த காட்டுக்கே ராஜா. . உங்களுக்கு உடல் நலமில்லை என்று தெரிந்ததும் மற்ற எல்லா தோழர்களும் உங்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால் இந்தக் குள்ள நரி மட்டும் உங்களை கண்டு கொள்ளவே இல்லை பார்த்தீரா? எவ்வளவு திமிர் அதற்கு?எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்றது.

ஓனாய் சொல்வது உண்மை என்று பட்டது சிங்கத்திற்கு. கடுங் கோவத்தோடு கர்ஜனை செய்தது.

அப்பாடி இனி குள்ள நரியின் ஆட்டம் க்ளோஸ் என நினைத்து சந்தோஷப் பட்டது ஓனாய்.

குகையின் வாசலில் நின்றபடி அனைத்தையும் கேட்டபடி நின்றிருந்த குள்ள நரிக்கு உடம்பு நடுங்கியது.

அதன் மனதில் ஒரு யோசனை தோன்றியது. குகையின் உள்ளே நுழைந்தது.

சிங்கத்தை வணங்கியது. சிங்க ராஜாவே. . உங்களைப் பார்க்க நான் வரவில்லை என என்னைத் தப்பாக நினைத்திருப்பீர். ராஜாவே நான் உங்களுக்காக . . நீங்கள் உடல் நிலையில் சுகப்படுவதற்காக மருந்து வாங்க நாடு நகரங்களிலெல்லாம் மருத்துவரைத் தேடி அலைந்தேன். இன்றுதான் அவரைப் பார்த்தேன். அவர் உசிதமான மருந்தொன்றைக் கூறினார் என்று சொல்லி சிங்கத்தின் காதில் ஏதோ சொல்லியது.

அது என்ன சொல்லியது சிங்கத்தின் காதில்?

சிங்க ராஜாவே உங்களின் உடல் நிலை சீராக வேண்டுமானால் ஒரு ஓனாயின் தோலை உரித்து அத்தோலை உங்களின் உடல் மீது போர்த்த வேண்டுமென்று மருத்துவர் சொன்னார் என்றது.

அடுத்த நிமிடம் குள்ள நரியைப் பற்றி கோள் சொல்லிய ஓனாயின் மீது பாய்ந்து அதன் தோலை உரித்து தன் மீது போர்த்திக்கொண்டது சிங்கம். . செத்தது ஓனாய் என்று மகிழ்ந்தது குள்ள நரி. கோள் சொல்லிய ஓனாய்க்கு கேடு விளைந்தது.  

கதை சொல்லும் கருத்து:

ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் கோள் சொல்வது பண்பற்ற செயல். அதனை பண்புடைய எவரும் செய்யமட்டார்கள்.

Story # 08 - Kurangu sonna nyayam

Story # 10 - Alavodu aasaipadu

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.