(Reading time: 3 - 5 minutes)

கருத்துக் கதைகள் – 10. அளவோடு ஆசைப் படு... - தங்கமணி சுவாமினாதன்

angel

தாயம்மா பால்,மோர், நெய் வியாபாரம் செய்பவள். பேராசைக்காரி. நியாயமாய் வியாபாரம் செய்யமாட்டாள். பாலிலும் மோரிலும் அதிகமாகத் தண்ணீர் கலப்பாள். கூடுதல் விலைக்கு விற்பாள். பெரும் பணக்காரியாக வெண்டுமென்பது அவள் விருப்பம். ஒரு நாள் நிறைய மோர் மீந்து விட்டதால் அதை பக்கத்து ஊர் சந்தையில் கொண்டு சென்று விற்க எண்ணி மோரை ஒரு குண்டானில் ஊற்றி அக்குண்டானை ஒரு கூடையில் வைத்துத் தலையில் வைத்துத் தூக்கியபடி சந்தைக்குச் சென்றாள். போகும் வழிதோறும் இம் மோரை எவ்வளவுஅதிக விலைக்கு விற்கலாம் எவ்வளவு பணம் சேர்க்கலாம் என்ற எண்ணமே மிகுந்திருந்தது.

நினப்புதானே பிழைப்பைக் கெடுக்கும் என்பார்கள்?பணம் சேர்க்கும் யோசனையோடு நடந்தவள் கால் தடுக்கிக் கீழே விழுந்தாள். தலையிலிருந்த கூடையும் மோர்க்குண்டானும் அவளோடு சேர்ந்து கீழே விழ வழியெங்கும் மோர் ஓடியது. அப்படி ஓடிய மோர் அங்கிருந்த ஒரு பள்ளத்தில் தேங்கியது. மோர் கொட்டிவிட்டதே என்று அழுதாள் தாயம்மா.

அந்த வழியாக வந்த நாய் ஒன்றிற்கு மிகவும் தாகமாக இருந்தது. அது அங்கும் இங்கும் தண்ணீரைத் தேடி அலைந்தது. கிடைக்கவில்லை. இப்போது பள்ளத்தில் தேங்கியிருந்த மோர் அதன் கண்களில் பட்டது. வெகு ஆவலாய் அம்மோரைக் குடித்தது. குடித்து முடித்தவுடன் அழும் தாயமாவைப் பார்த்து ஏன் அழுகிறாய் என்றது. மோர்கொட்டி விட்டது. எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது எனச் சொல்லி மேலும் அழுதாள் தாயம்மா.

என்ன அதிசயம்?சட்டென நாய் ஒரு தேவதையாக மாரியது. பெண்ணே அழாதே உன் மோரைக் குடித்ததால்தான் என் தாகம் தணிந்தது. உனக்கு மூன்று வரம் தருகிறேன்.

நீ உனக்கு வேண்டியதைக் கேள் என்றது. பண ஆசை பிடித்த தாயம்மா முதலில் அவளின் கூடை நிறைய பணம் வேண்டுமெனக் கேட்டாள். அவ்வாறே கூடை நிறையப் பணம் நிரம்பியது. இரண்டாவதாய் குண்டான் நிறையப் பணம் கேட்டாள் அதுவும் நிறைந்தது. மூன்றாவதாய் தன் சேலையைப் பாதியாய்க் கிழித்து அதை விரித்துப்போட்டு அதிலும் பணம் நிரம்பக் கேட்டாள். அதையும் கொடுத்துவிட்டுத் தேவதை மறைந்தது. பணம் நிறம்பியிருந்த கூடை குண்டான் துணி மூட்டை மூன்றையும் தாயம்மாவால் தூக்க முடியவில்லை. மிகவும் கனத்தன. மிகமிக மெதுவாய் வீட்டை நோக்கி நடந்தாள். அதனால் இருட்டிவிட்டது. இரவாகி விட்டது. அப்போது திருடர்கள் மூன்று பேர் அவளின் எதிரே வந்தனர். பணத்தைப் பார்த்து விட்டனர். அவ்வளவுதான். தாயம்மாவை ஒரு ஓரமாய்த் தள்ளிவிட்டுவிட்டு மொத்தப் பணத்தையும் பிடுங்கிக்கொண்டு அவள் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

பணத்தை மட்டுமல்லாது நகைகளையும் பறி கொடுத்த தாயம்மா கதறி அழுதாள்.  தேவதையிடம் அளவோடு கேட்டுப் பணத்தைப் பெற்றிருந்தால் பத்திரமாய் விரைவாய் வீடு போய் சேர்ந்திருக்கலாமல்லவா? அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு எல்லா பணத்தையும் இழந்ததோடு நகையுமல்லவா போய்விட்டது. பேராசை பெரு நஷ்டமாகிவிடும் என்பது எவ்வளவு உண்மை?. .

 

கதை சொல்லும் கருத்து:

அளவோடு ஆசைப் பட வேண்டும். பேராசை பெரும் நஷ்டம் தரும். பேராசை பெரு நஷ்டம்.

Story # 09 - Kol sonnal kedu vilaiyum

Story # 11 - Thalaipilla kathai

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.